தொழில்முனைவோருக்கு இதெல்லாம் இருக்கணுங்க…
தன்னார்வத்துடன் ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கி அதை திறம்பட நிர்வகிப்பவரே தொழில்முனைவோர் ஆவார். இவர்கள் யாரிடமும் கைகட்டி சேவகம் செய்ய தேவையில்லை.
தொழிலை நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலையை துணிச்சலுடனும் சவாலுடனும் ஏற்றுக்கொள்பவர். எந்த தொழிலையும் துவங்குவதற்கான வாய்ப்புகளை முன்பே அறிந்து அவற்றை மதிப்பீடு செய்து தொழில் துவக்கத்திற்கு தேவைப்படும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்.
இடர்பாடுகளை எதிர்கொண்டு பொருளாதார உறுதியற்ற நிலையை ஆராய்ந்து வெற்றிகொள்பவர். தொழிலுக்கு தேவைப்படும் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் மூலதனம் இவற்றை சேகரித்து பயன்படுத்தி பெறப்பட்ட புதிய பொருட்களை சந்தைப்படுத்துபவர்.
தொழில் துவங்க முக்கியமாக மற்றும் அடிப்படையாக தேவைப்படுவது, புதுமையான எண்ணங்கள், இடர்பாடுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் தொலைநோக்கு ஒருங்கிணைப்பதில் திறமை ஆகியவை முக்கிய குணாதியங்களாகும். மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுபவர் தொழில் முனைவோர் ஆவார்.
புதிதாகத் தோன்றும் அரிய எண்ணங்களை நடைமுறைப்படுத்த முயலும் எண்ணம் இருந்தார் போதும். மேலும் தொழில்முனைவோருக்கு தன்னம்பி்க்கை என்பது நிறைய தேவையாகும்.
வேலைவாய்ப்பு தருபவராக இருப்பீர்..!
பொருளாதார ரீதியான உயர்வும், வசதியான வாழ்க்கையும் பெற வழிவகுக்கிறது. தங்களுக்கான வேலைவாய்ப்பை தேடிக்கொண்டு அத்தகைய வாய்ப்பை பிறரும் அடைய உதவுகின்றனர். வேலை தேடுபவராக இருப்பதைவிட வேலை வாய்ப்பு அளிப்பவராக இருப்பது சிறப்பம்சம்.
தொழில் வளர்ச்சி குன்றிய பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்கி அதன் மூலம் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகாட்டும். உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்தி மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி அவற்றை உள்நாட்டில் சந்தைப்படுத்தியும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் நாட்டிற்கு அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.
நாட்டில் பொருளாதார மேம்பாடு, உற்பத்தி திறன் அதிகரிக்க உதவுகிறது. இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ வாய்ப்பளிக்கிறது.