நடுத்தர வயதினருக்கு….
இந்தியாவில் ஓய்வு பெற்றவர்களில் பத்தில் ஏழு பேர் ஓய்வுக்கால செலவுகளுக்கு தங்கள் பிள்ளைகளையே சார்ந்திருக்கிறார்கள்.
67% சீனியர் சிட்டிசன்கள் ஓய்வுக் காலத்திலும் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 40-களில் இருக்கும் நடுத்தர வயதினர் பலரும் கூடிய சீக்கிரமே பொருளாதார சுதந்திரத்தை எட்டி, வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்பதை ஒரு தாரக மந்திரமாகவே பேசி வருவதைக் காண்கிறோம்.
தானே பொருள் சேர்த்து, அதில் ஒரு பகுதியைத் திட்டமிட்டு செலவிட்டு, தனக்குப் பிடித்த முறையில் நேரத்தைப் பயன்படுத்தி, எளிய வாழ்வு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கை என்பது தற்போது இயக்கமாகவே மாறியுள்ளது.
எது முழுமையான ஓய்வு?
பணிஓய்வு எனில், ஒரேயடியாக சோம்பி இருப்பது என்று அர்த்தமல்ல; ஒரு வேலையை பொருளாதார காரணங்களுக்காகச் செய்யாமல், விருப்பப் பட்டு செய்வது. ஆகவே, என்ன மாதிரியான வேலை தனக்குப் பிடிக்கும், அதற்காக எவ்வளவு நேரம் செலவிட முடியும், அதிலிருந்து வருமானம் வர வழியில்லாவிட்டாலும், கையிருப்பு கரையாமல் இருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டும்.
கடன் அடைத்தல் முக்கியம்…
பணி ஓய்வுக்குப் பின் வரும் பேசிவ் வருமானத்தில் கடன் கட்டுவதற்குப் பணம் ஒதுக்குவது கடினம்; ஆகவே, பணி ஓய்வுக்கு முன்பு உங்கள் கடன்களை முழுவதுமாக அடைக்கும் வழிகளைத் தேட வேண்டும்.
செலவுக் குறைப்பு…
வேலைக்குச் சேர்ந்து 15 முதல் 20 வருடங்களுக்குள் பணி ஓய்வு பெற விரும்புவதால், இந்தக் காலகட்டத்தில் மிக மிகக் குறைந்த செலவில் வாழ வேண்டியிருக்கும். அப்போது தான் கடைசி வரை நம்முடன் வரக்கூடிய அளவுக்கு ஒரு மொத்தத் தொகையை சேமிக்க இயலும். ஆகவே, இந்த 15 வருடங்களும் செலவைக் குறைத்து சேமிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
தேவைக் கணிப்பு…
30 வயதாகும் ஒருவருக்கு இன்று ஆகும் மாதாந்திரச் செலவு ரூ.55,000 எனில், 45 வயதில் அவர் பணி ஓய்வு பெற எண்ணும்போது பண வீக்கத்தின் லீலையால் அவருக்கு மாதம் ரூ1.35 லட்சம் தேவைப்படும். அதை பேசிவ் வருமானமாக அவர் பெற வேண்டும் எனில், சுமார் ரூ.5 கோடி கையிருப்பு இருக்க வேண்டும். இதை வெறும் சேமிப்பின் மூலம் பெறுவது கடினம். ஆகவே, இவர்கள் வேலையில் சேர்ந்த உடனேயே, தங்கள் முதலீடுகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
முதலீட்டுத் தேர்வு…
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள், நேஷனல் பென்ஷன் ஸ்கீம், வங்கி வைப்பு நிதிகள் போன்று பேசிவ் வருமானம் தரக்கூடிய வழிகளில், திட்டமிட்டு முதலீடு செய்து வர வேண்டும். சேர்த்த தொகையை, அவ்வப்போது தேவைப்படும் பணம், சில வருடங்களுக்குப் பின் தேவைப்படும் பணம், காலம் முழுவதும் உடன் வர வேண்டிய பணம் என்று மூன்று வகைகளாகப் பிரித்து, அதற்குத் தகுந்தவாறு முதலீடு செய்வது நல்லது. செலவுகளுக்காகப் பணத்தை வெளியே எடுக்கும்போதும் கட்டுப்பாடு இருப்பது அவசியம்.