விதை பண்ணையில் லாபம்…
இன்று என்ன தொழில் செய்வது என்று கிராமத்து இளைஞர்கள் பலர் போராடி வருகின்றனர். அந்த வகை யில் மத்திய, மாநில அரசுகள் புதிய, புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் தற்போது விதைப்பண்ணை அமைப்பதற்கான செயல் பாடுகளை அரசு ஏற்று நிதி வழங்குகிறது. அதனடிப்படையில் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது வட்டார உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
வேளாண் – உழவர் நலத்துறையில் விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், நெல், சோளம், பயறுவகை பயிர்கள், நிலக்கடலை, எள்ளு ஆகிய பயிர்கள் சான்று மற்றும் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்ய விவசாயிகளின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விதைப்பண்ணைகள், விதைச்சான்று துறை வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.
நெல் ஒரு கிலோவுக்கு ஆதார விதை, 33 ரூபாய், சான்று விதை, 30 ரூபாய் கொள்முதல் விலையாகும். சோளம், 56 / 50, பயறு வகைகளான துவரை, 82 / 79, உளுந்து, 88 / 83, தட்டைபயறு, 85 / 80, கொண்டைகடலை, 96 / 92, கொள்ளு, 57 / 55 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, 84 / 80; எள், 138 / 136 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விதை பண்ணையில் இருந்து விவசாயிகளிடம் இருந்து இந்த கொள்முதல் விலைக்கு விதைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது வட்டார உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.