திருச்சியில் மாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி
வழங்குகிறார் திருச்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி..
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் கண்ணன்.
கடந்த 10 ஆண்டுகளாகத் திருச்சி, இரட்டை வாய்க்காலில் சொந்தமாகக் கார்மென்ட்ஸ் வைத்துத் தொழில் செய்து வருகிறார் மாற்றுத் திறனாளியான கண்ணன். மாற்றுத்திறன் உடையவர்களை தொழில் முனைவோர் ஆக்க வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பையும் அளித்து வருகிறார். இவர் சென்னை கல்லூரியில் பேஷன் டிசைனிங் முடித்து சென்னை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட இடங்களிலும் பெங்களுருவிலும் வேலை பார்த்துள்ளார்.
அந்த அனுபவத்தால் திருச்சிக்கு வந்து ஆடை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
அதை வணிக நோக்கில் மட்டும் நடத்தாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பயிற்சியும் அளித்து வருகிறார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெய’ முரளிதரன் பரிந்துரையின் பேரில் பலருக்கும் பயிற்சி அளித்தார். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் அறை, உணவு ஆகியவற்றையும் இலவசமாகவே வழங்கியுள்ளார். இது வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தொழில் கற்றுச் சென்றுள்ளனர். பலருக்கு வங்கி கடன் ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.
கிராமங்களில் இருக்கும் மாற்றுத்திறனாளி கள் தங்களது இயலாமை காரணமாக சொந்த ஊரை விட்டு வெளியே வருவதேயில்லை. இத்தகைய சூழலில் அரசால் வழங்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு சென்றடையாமலேயே உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் விதமாக இவர் இந்த பயிற்சியினை அளிக்கிறார்.
அத்துடன் திருச்சி மாவட்ட உடல்ஊனமுற்றோர் நலச்சங்கம் சார்பில், ரயில், பேருந்துகளில் பயணிக்க உதவியாக அனுமதி அட்டை வாங்கித் தருவது, உதவி தொகை வாங்கித் தர விண்ணப்பிப்பது போன்றவற்றையும் செய்து தருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் இலவசமாக கார்மென்ட்ஸ் தொழிலில் பயிற்சி பெற 94422 54198 என்ற கண்ணனின் செல் எண்ணை அழைக்கலாம். இதன் விலாசம் : வாசு கார்மெண்ட்ஸ், இரட்டைவாய்க்கால், வயலூர் சாலை, திருச்சி.