“நட்பு வேறு, பிசினஸ் வேறு..” ஹெச்.டி.எப்.சி. வங்கியை காப்பாற்றிய ஆதித்யா பூரி
பிரபல தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி. பற்றியும், அதன் தலைவர் ஆதித்யா பூரி குறித்தும் சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் மோசடி நிறுவனங்களிடமிருந்து வங்கியை காப்பாற்றிய ஆதித்யா பூரியின் செயல் முக்கியமாக பதியப்பட்டுள்ளது.‘
பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா, பெரும் கடன் கேட்டு வங்கியை அணுகிய போது, ஆதித்யா பூரி, “இது போன்ற நிறுவனங்களுக்கு நாங்கள் கடன் தருவதில்லை” என மறுத்துவிட்டார்.
அதற்கு மல்லையா, “நீங்கள் சிறந்த வங்கியாளர் என நினைத்தேன், ஆனால் நீங்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்” என சொன்னார். இதற்கு ஆதித்யா பூரி, ‘யாருக்கு வங்கிகளின் செயல்பாடு தெரியும், யாருக்கு தெரியாது’ என்பதை காலம் பதில் சொல்லும் என அமைதியாக கூறி மல்லையாவிற்கு கடன் தர மறுத்துவிட்டார்.
இதே போல் மற்றொரு சம்பவம். பிரபல வைர வியாபாரி ஆதித்யா பூரியிடம், அவர்களது நிறுவனத்துடன் இணைந்து வைர வியாபாரம் செய்யலாமே என நயமாக கூறியுள்ளார். ஆதித்யபூரியோ, “எங்களுக்கு வங்கி மட்டுமே நடத்த தெரியும், வைர வியாபாரம் தெரியாது” எனக் கூறி கழற்றிவிட்டார். அந்த வைர வியாபாரி 4 ஆண்டுகளுக்கு முன்னர் கடனை கட்டாமல் நாட்டை விட்டு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் மோசடியிலிருந்து வங்கி தப்பித்த கதை ஆதித்யா பூரியின் தீர்க்க தரிசனத்தை பறைசாற்றுகிறது.