தொழில் ஆரம்பத்தில் நினைத்த வேகத்தில் வருமானம் வராது.
செலவு நினைத்ததை விட வேகமாக வரும். அந்த நேரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
தொழில் ஆரம்பித்து வீடு வாங்க 30 ஆண்டுகள் பிடித்தது. தொழிலில் நேர்மையாக இருந்தது, தொழிலில் டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்டது, முக்கியமாக கடன் கொடுக்காமல் வியாபாரம் செய்தது, சிரமமான காலகட்டத்திலும் நம்பிக்கையை தந்தது
தள்ளுவண்டியிலிருந்து
ஒரு ஐஸ்கிரீம்
சாம்ராஜ்யம் !
இந்த இதழில் நாம் அறியப் போகும் நமது ஹீரோ 1949ல் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் எனும் ஊரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் பள்ளிக்கு படிக்கச் செல்ல மனமில்லையென்றாலும், பள்ளி வாசலில் விற்கிற ஐஸ் குச்சியை சுவைக்கவாவது பள்ளிக்கு சென்று விடுவார். அவர் தான் அருண் ஐஸ் கிரீம் R.G சந்திரமோகன்.!
குடும்ப சூழல் காரணமாய் தனது 21ம் வயதில், 1970ல் தொழிலில் அடியெடுத்து வைத்தார். அன்று அவரிடம் இருந்தது ரூ.13,000/_ மட்டுமே. அதை வைத்து, என்ன செய்து, வாழ்வை கட்டமைத்துக் கொள்வது என்று யோசிக்கத் தொடங்கினார்.
அன்று அவர் கையிலிருந்த தொகையை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று அது 40 இலட்சமாக வளர்ந்திருக்கும். வட்டித் தொழிலில் முதலீடு செய்திருந்தால் 60 இலட்சமாக உயர்ந்திருக்கும். அன்று சென்னையில் இரண்டு பிளாட்டுகள் வாங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு இரண்டு அல்லது மூன்று கோடியை தொட்டிருக்கும். ஆனால், அவர் அன்று அத்தொகையை தொழிலில் முதலீடு செய்தார்.
என்ன தொழில் செய்வது? தான் மிகவும் விரும்பிய ஐஸ்கிரீமையே தொழி லாக்கிக் கொண்டார் சந்திரமோகன். சென்னை ராயப்பேட்டையில் 250 சதுர அடியில் 3 தொழிலாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் அருண் ஐஸ்கிரீமின் ஆரம்பகட்ட வரலாறு.
R.G சந்திரமோகன் & கோ என்ற பெயரில் கம்பெனி யை ஆரம்பித்தார். அன்று ஐஸ்கிரீம் காட்டேஜ் இண்டஸ்ட்ரியில் சுமார் 40,000 பேர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் தான் தனித்து தெரிய வேண்டும் என்று R.G சந்திரமோகன் விரும்பினார்.
ஆரம்பத்தில் சாதாரணமான, அப்பொழுது எல்லோரும் செய்து கொண்டிருந்த குச்சி ஐஸ் வகைகளையே இவரும் செய்து வந்தார். தொடர்ந்து ஐஸ்கிரீம்களில் புதுவித சுவைகளை அறிமுகப்படுத்தினார். முதல் வருட விற்பனை(1970) ரூ.1,50,000, 1990ல் வருட விற்பனை ரூ.3 கோடி, 2009ல் விற்பனை ரூ.3,000 கோடி.
1986 ல் Hatsun Agro Products என்ற பெயரில் அருண் ஐஸ்கிரீம் உடன் ஆரோக்கியா பால் பிஸினஸையும் தொடங்கினார். தொடர்ந்து பால் சார்ந்த பொருட்களையும் சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்தும் வெற்றிகரமாக விற்பனை ஆனது. 2010ம் வருடம் Ibaco என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லரை ரெஸ்ட்டாரண்ட் முறையில் துவங்கினார். ஐஸ்கிரீம் சுவைப்பதில் ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்தது Ibaco . நம்மில் பலருக்கும் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா பால், Ibaco எல்லாம் ஒரு நிறுவனத்தை சார்ந்தது என்பது ஆச்சரியமாக இருக்கும். 250 சதுர அடியில் ஆரம்பித்த நிறுவனம் தற்போது தனது அனைத்து ஷோரூம்களையும் சேர்த்து மூன்று மில்லியன் சதுர அடி பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது.
நேரடியாக நான்கு இலட்சம் விவசாயிகளுடன் தொடர்பில் இருக்கிறது ஹட்சன் நிறுவனம். மூன்று ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இன்று 10,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 1970ல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று 51 வருடங்களை கடந்து கொண்டிருக்கிறது.
முதல் 10 வருட விற்பனையை தற்போது வெறும் 30 நிமிடத்திலும், 20 வருட விற்பனையை ஒரு நாளிலும், 30 வருட விற்பனையை தற்போது ஒரு மாதத்திலும், 40 வருட விற்பனையை ஒரு வருடத்திலும் நிறைவு செய்வதாக பெருமையுடன் சொல்கிறார் சந்திரமோகன். இன்று இவரது சொத்து மதிப்பு ரூ.15,000 கோடி..! சொத்து மதிப்புடன் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 41வது இடத்தில் உள்ளார்.
வெறும் 13,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று இந்தியாவின் No.1 தனியார் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்த விஸ்பரூப வெற்றிக்கு அவரது கடின உழைப்பும், பொறுமையும், விடா முயற்சியும் தான் காரணம் என்றாலும், இந்த வளர்ச்சி குறித்து R.G.சந்திரமோகன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று அவரிடமே கேட்ட போது..
“ஆரம்பத்தில் சாதாரண குச்சி ஐஸ் தான் செய்யத் தொடங்கினோம். இத்தொழிலில் அடுத்த கட்டத்திற்கு போக தொழில் ரீதியான அறிவு தேவைப்பட்டது. தனியார் கல்லூரியில் தொழில் மேலாண்மை படிப்பை கற்றுத் தொழில் ரீதியான அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போதைய மார்க்கெட் லீடராக இருந்த DasaPrakash, Kwality Ice cream கம்பெனிகளுடன் போட்டியிடுவது சிரமமாகவே இருந்தது. கல்லூரி கேண்டீன், திருமண வைபவங்கள், பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஐஸ்கிரீம் விநியோகித்தது, அருண் ஐஸ்கிரீம் ப்ராண்டை எல்லோரும் அரியச் செய்தது. ஆரம்பத்தில் நினைத்த வேகத்தில் தொழிலில் வருமானம் வராது. செலவு நினைத்ததை விட வேகமாக வரும். அந்த நேரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
தொழில் ஆரம்பித்து வீடு வாங்க 30 ஆண்டுகள் பிடித்தது. தொழிலில் நேர்மையாக இருந்தது, தொழிலில் டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்டது, முக்கியமாக கடன் கொடுக்காமல் வியாபாரம் செய்தது, சிரமமான காலகட்டத்திலும் நம்பிக்கையை தந்தது” என்கிறார். எந்த அடிப்படையில் இருந்தும் மேலே உயரத்துக்கு வரலாம் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும் ?
அடுத்த இதழில் தொலைநோக்கு திட்டத்தை உறுதியாக பற்றிக் கொண்டால் வெற்றி உறுதியென புன்னகையுடன் நம்மிடம் பேச வருகிறார் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் நாயகர்…!
……..பழகலாம் தொடர்ந்து!
கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை
imagefelixrtn@gmail.com
என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்.