தங்க பத்திரம் : அறியவேண்டிய தகவல்கள்..!
மத்திய அரசு அறிமுகம் செய்த தங்கத்தின் மீது முதலீடு செய்யும் பத்திரங்களிள் விவரம் அறிவோம்…
இந்த தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி வழங்கப்படும், அதாவது ஆண்டுக்கு 2.5 சதவிதம் வட்டி. கணக்கீட்டு அடிப்படையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வட்டியாக கிடைக்கும். தங்கம், நம் கலாச்சாரத்தோடு சேர்ந்த விஷயம் என்பதால், அதில் மக்களை முதலீடு செய்ய வேண்டாம் என்று சொல்வதை காட்டிலும், தங்க பத்திரம் போன்ற மாற்று வழிகளில் முதலீடு செய்வது சிறந்தது என்ற கருத்து உள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம், தங்க காசுகளில், நகைகளில் செய்யப்படும் முதலீட்டை விட அதிக வருமானம் தரும் என்பதே உண்மை. தங்கத்தை முதலீடாக பார்ப்பதை விடுத்து மக்கள் வேறு வழிகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்னர், அதற்கான முதிர்வு காலம் என்பது 8 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் 2.5 சதவிதம் வட்டி கிடைக்கும். அதாவது 8 ஆண்டுகளுக்கு சுமார் 20 சதவிதம் வட்டி கிடைக்கும்.
அது போக தங்கத்தின் விலை, சந்தை விலைக்கு ஏற்றாற்போல் மாறி கொண்டே இருக்கும். எப்படி ஒரு வீட்டை வாங்கினால், அதற்கு வாடகை வருகிறதோ அது போல், இந்த திட்டத்தில் வட்டி கிடைக்கும். அதேபோல், எப்படி அந்த வீட்டின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்றாற்போல், ஏறி இறங்குகிறதோ, அது போல் இந்த பத்திரத்தில் உள்ள தங்கத்தின் மதிப்பிலும் மாற்றம் இருக்கும். இந்த வட்டி தொகை, ஒருவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, வருமான வரி விதிக்கப்படும். இந்த திட்டத்திற்கான வட்டி தொகை 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பத்திரங்களை மத்திய அரசின் சார்பாக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது எனவே, இதன் பாதுகாப்பதன்மை உறுதி செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் தங்க பத்திரங்களை வாங்க ஒருவர் இந்தியராகவோ, NRI ஆகவோ இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் கூட முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்ச முதலீடு என்பது ஒரு கிராம், அதிகபட்ச முதலீடு என்பது ஆண்டுக்கு 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். உங்கள் வீட்டில் 3 பேர் இருக்கிறீர்கள் என்றால், ஒவ்வொருவர் பெயரிலும் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம்.
இதுவே ஒரு அறக்கட்டளையின் பெயரில் முதலீடு செய்யும் போது 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தங்கம் வேண்டும் என்று விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்கம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இந்த திட்டத்திற்கு தேவையான அனைத்து தரவுகளும் வழங்கப்பட வேண்டும்.
தங்க பத்திர திட்டத்தில் வாங்கும் போது, 24 கேரட் தங்கத்தில் தான் முதலீடு செய்யப்படுகிறது. அதே நேரம், ஒரு கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். 8 ஆண்டுகள் இந்த பத்திரத்திற்கான முதிர்வு காலம் என்றாலும், டிமேட் வடிவில் இந்த பத்திரம் இருந்தால், 5வது ஆண்டில் இந்த பத்திரத்தை சந்தையில் விற்பனை செய்ய முடியும். இந்த பத்திரங்களை அடமானம் வைத்து வங்கி கடனும் பெறமுடியும்.