பெருகும் வேலைவாய்ப்புகள்..!
சர்வதேச அளவில் கொரோனா பிரச்சினைகள் குறைந்து தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஐடி நிறுவனங்கள் புதிய உத்வேகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவை பணியமர்த்தல்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேற்கூறிய நான்கு நிறுவனங்களும் இணைந்து 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கையானது 2020 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 மடங்கு அதிகமாகும். கொரோனா வருவதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விடவும் இது இரு மடங்கு அதிகமாகும்.
தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கு எழுந்துள்ள அதிகமான தேவையால்தான் இந்த அளவுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களிலும் ஐடி துறையில் இன்னும் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.