பிசினஸ் திருச்சி’ இதழ், சமூக நீதிப் பேரவையுடன் இணைந்து, கடந்த ஆக.7ம் தேதி, திருச்சி, அல்லித்துறையில், “தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி” ஒன்றை நடத்தியது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட வேலை இழப்பினாலும் சிறு தொழில்கள் முடங்கியதாலும் அடுத்து என்ன செய்வது என்று இழக்கின்றி தடுமாறும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி வர்த்தக மையத்தின் தலைவர் என்.கனகசபாபதி கூறுகையில், “விவசாய பொருட்களுக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய சந்தை உள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம் இருக்கிறது. தினமும் பயணிகள் விமானத்தில் 22 டன் வரை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சரக்கு விமானங்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்து வருகிறது திருச்சி வர்த்தகர் சங்கம்.
திருச்சியில் விளைவிக்கப்படும் வாழை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். வாழையினால் தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டுப் பொருட்களுக்கும் நல்ல மதிப்புண்டு. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
திருச்சி, அரியமங்கலம் தொழிற்பேட்டை தொழிங்சங்கத் தலைவர் ஆர்.சண்முகம் பேசுகையில், “தொழில் தொடங்க விரும்புவோர், பிறரைப் பார்த்து, இந்த தொழில் செய்து அவர் பயன் பெற்றுவிட்டார், நாமும் தொடங்கலாம் என்று தொடங்கினால் அது அவசரத்திற்காக தொடங்கப்பட்ட தொழிலாகிவிடும். அதில் வெற்றி கொள்ள முடியாது. ஒரு தொழில் தொடங்கும் முன் அந்தத் தொழில் குறித்து எனக்கு என்ன தெரியும்., அதை நான் எப்படி கற்றுக் கொள்ள முடியும், அதை எப்படி செயல்படுத்த முடியும் என்று ஆலோசித்து சிந்தித்து ஒரு தொழிலைத் தொடங்கி அந்தத் தொழிலை தினம் தினம் கற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
தொழில்முனைவோராக விரும்புவோர்க்கு உதவியாக திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கம் இயங்குகிறது. அனைத்து வழிகாட்டுதலும் அங்கு வழங்கப்படுகிறது. அரசின் அனைத்து திட்டங்களும் வெற்றி பெறுவதற்கான வழிகளும் கற்றுத் தரப்படுகிறது” என்றார்.
பட்டய கணக்கர் கே.மகேஷ் மாணிக்கம் பேசுகையில், தொழில்முனைவோராக வேண்டும் என விரும்புவோர் வரவு செலவு கணக்குகளை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் தொடங்குவதற்கு கடன் பெறுவது தவறல்ல. ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கி இருந்தோமென்றால் கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த வேண்டும். இல்லையேல் அது உங்கள் தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதை தடுத்து விடும். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் கடன் பெற, இரண்டு வருடம் முதல் மூன்று வருடமாவது நாம் வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். உங்கள் வர்த்தகத்தின் வரவு செலவு கணக்குகளை கணக்கு எழுதுவோர் அல்லது ஆடிட்டர் பார்த்துக் கொள்வார் என்று இல்லாமல் நாமே ஒரு முறையாவது சரி பார்த்துக் கொண்டால் மட்டுமே தொழிலைப் பற்றிய முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள முடியும்” என்றார்.
ஸ்கில் இந்தியா மண்டல தலைவர்
கல்யாணி விஸ்வநாதன் பேசுகையில், “கிராமப்புறப் பகுதிகளிலும் குறு, சிறு தொழில் முனைவோராக செயல்படுவதற்கு மத்திய அரசின், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து பயன்படுத்தி தொழில்முனைவோராக முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய சமூக நீதிப் பேரவையின் மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் பேசுகையில், “இந்திய தொழிலாளர்கள் என்றால் உலகம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதே வேளையில் இந்தியாவில் தொழில்முனைவோர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. சிறந்த வேலையாட்கள் என்று பெயர் வாங்கிய நாம், சிறந்த தொழில்முனைவோராக மாறவில்லை. இனியாவது தொழில்முனைவோராக வேண்டும் என்பதற்காகவே இந்ததொழில் முனை வோருக்கான வழிகாட்டு முகாமை நடத்துகிறோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்று சிறப்பு விருந்தினர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்ததோடு, தொழில் குறித்து தங்களது சந்தேகங்களை கேட்டு அறிந்து கலந்துரையாடினர்.
தொடக்கத்தில் பேரவையின் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவில், ‘பிசினஸ் திருச்சி‘ இதழின் மேலாளர் ச.பாரத் நன்றி தெரிவித்தார்.