பிசினஸ் பிராண்டை பிரபலப்படுத்த உதவும் ஹேஸ்டேக்
பிசினஸுக்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு புரமோஷனும் முக்கியம். அப்படி விளம்பரம் செய்யும்போது ஹேஸ்டேக் (hastag) பகிர்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.
‘‘ஹேஸ்டேக் என்பது நமது வாடிக்கையாளர்களை எளிதாக அணுக உதவும் ஒரு டூல். முதல்முதலாக ட்விட்டர் பயன்பாட்டில் தொடங்கி இது, இன்று எல்லா சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஹேஸ்டேக்கை ஸ்மார்ட்டாக பயன்படுத்தத் தெரிந்தால் அதிக வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைய முடியும்.
ஹேஸ்டேக் வகைகள்
ஹேஸ்டேக் பொறுத்த வரை, நிறைய வகைகள் உண்டு. ஆனால், பயன் பாட்டின் அடிப்படையில், டிரெண்டிங் ஹேஸ்டேக், கன்டென்ட் ஹேஸ்டேக், பிராண்ட் ஹேஸ்டேக் என பிரிக்கலாம்.
டிரெண்டிங் ஹேஸ்டேக் என்பது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒன்றை மக்கள் தேடும்போது, நீங்கள் அது சார்ந்து ஹேஸ்டேக் பதிவிட்டு இருந்தால், அதிக மக்களுக்கு உங்கள் பதிவு சென்றடையும்.
கன்டென்ட் ஹேஸ்டேக் என்பது வேறு விதம். உதாரண மாக, நீங்கள் ஒரு புடவை விற்பனையாளர், உங்களுடையது காட்டன் புடவைகளுக்கான பிராண்ட் எனில், #diwali2022 என்பது டிரெண்டிங் ஹேஸ்டேக்கி லும் #sarees, #cottonsarees #traditional என நீங்கள் ஹேஸ்டேக்குகளைப் பயன்படுத்துவது கன்டென்ட் ஹேஸ்டேக்கிலும் வரும். குறிப்பாக, காட்டன் புடவைகளைத் தேடுபவர்களுக்கான ஒரு பிராண்ட் உங்களுடையது என்பதை வெளிப்படுத்த இந்த கன்டன்ட் ஹேஸ்டேக் உதவும்.
பிராண்ட் ஹேஸ்டேக் என்பது உங்களுடைய பிராண்டையும், பெயரையும் ஹேஸ்டேக்காக பதிவிட்டு உங்களின் பிராண்ட் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவது.
ஹேஸ்டேக்குக்குப்பின் நீங்கள் பதிவிடும் வார்த்தை சுருக்கமாகவும், எளிதில் புரியும்விதமாகவும், முடிந்தளவு ஒரே வார்த்தையாகவும் இருக்க வேண்டும். ஹேஸ்டேக்குக்குப்பின் எந்த நிறுத்தல் குறியீடுகளும் பயன்படுத்தக் கூடாது. வன்முறைகள் சார்ந்த ஹேஸ்டேக்களைத் தவிர்த்துவிடுங்கள்.
ஹேஸ்டேக் தேடும்போதே, அதில் எத்தனை பேர் இந்த ஹேஸ்டேக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணிக்கை வந்துவிடும். அந்த எண்ணிக்கையில் அதிகமானவர்கள் பயன்படுத்தியதை நீங்களும் தேர்வு செய்யுங்கள்’’ என்றார்.