போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டிருக்கீங்களா? எச்சரிக்கை…
சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆதார் கார்டு காலாவதி, பான் நம்பர் மாற்ற வேண்டும் என மெசேஜ், லிங்க் மூலம் நன்கு படித்தவர்களையும் எளிதாக ஏமாற்றி பணத்தை சுருட்டுகின்றனர். போஸ்ட் ஆபீஸ் பெயரில் கிளம்பியுள்ள மோசடி கும்பல்கள் குறித்து தபால் துறை அதிகாரப்பூர்வமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தபால் துறை சில சர்வே, வினாடி வினா போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அரசாங்கம் மானியத் தொகை வழங்கி வருவதாகவும், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும், மெசேஜ் மற்றும் இமெயில் வாயிலாக தகவல் பரவி வருகிறது.
சர்வே அடிப்படையில் இந்திய தபால் துறை மானியம், போனஸ் அல்லது பரிசுகளை வழங்குவதில்லை. இதுபோன்ற வதந்திகளை யாருக்கும் பரப்ப வேண்டாம். பொய் தகவலை நம்பி அடையாளம் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வோர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர்கள் விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.
தபால் துறை தரப்பில், இந்த URLகள்/இணைப்புகள்/இணையதளங்கள் அகற்றப் படுவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்களும் விழிப்புடன் மோசடி மெசேஜ்களை உண்மை என நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம். அப்படி பணத்தை இழக்க நேரிட்டால் அதற்கு இந்திய தபால் துறை பொறுப்பில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.