வீட்டு கடன்… அறிய வேண்டிய தகவல்கள்…
கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால்…
வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், கிரெடிட் ஸ்கோர் சுமார் 750-க்குமேல் இருந்தால், சுலபமாக வீட்டுக் கடன் வழங்கு கின்றன. இதைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அதிக வட்டி விதிக்கின்றன. வங்கிகள் புதிய வீட்டுக் கடனை 6.8 சதவிகிதத்துக்கு வழங்கிவரும் நிலையில் தனியார் நிறுவனங்களின் வட்டி விகிதம் 10%, 12% என்பது போல் மிக அதிகமாக இருக்கும்
வேறு ஒரு வங்கிக்கு மாறினால் அபராதமா–?
இப்போதுள்ள வீட்டுக் கடனுக்கு வட்டி அதிகமாக இருக்கும்போது வேறு ஒரு நிறுவனத்துக்குத் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். இதில் நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருக்கும்பட்சத்தில் மட்டுமே, கடனை முன்கூட்டியே முடித்து வேறு வங்கிக்கு மாற்றும்போது அபராதம் விதிப்பார்கள். ரிசர்வ் வங்கி விதி படி, மாறுபடும் வட்டி விகிதத்தில் ப்ளோட்டிங் ரேட்டில் கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் இந்த அபராதம் இருக்காது. எனவே, குறைந்த வட்டி போடும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றி வட்டியை மிச்சப்படுத்தலாம்.
வீட்டுக்கடன் வாங்கும்முன்…
ஆனால், வீட்டுக் கடனை வாங்கும்முன் கடனை முன்கூட்டி முழுமையாகக் கட்டினால், பகுதித் தொகையைக் கட்டினால், வேறு வங்கிக்கு மாற்றினால் அபராதம் ஏதும் உண்டா என்பதைக் கேட்டு தெளிவுப்படுத்தி எழுத்து மூலம் பதில் பெற்றபின் கடன் வாங்குவது நல்லது.
இவர்களுக்கு அபராதமில்லை
கடன் வாங்கியவர் வேறு வங்கியிலிருந்து கடன் எதுவும் வாங்காமல் சொந்தப் பணத்தைக் (குடும்பச் சொத்து விற்றப் பணம், முதலீட்டுப் பெருக்கம் மூலம் கிடைத்த தொகை, சொந்தச் சேமிப்பு) கொண்டு கடனை அடைத்தால், வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் அதற்கு அபராதம் விதிப்பதில்லை.’’
90 சதவீதம் கடன்
சொத்தின் மதிப்பில் 70% – 80% வரை வீட்டுக் கடன் கிடைக்கும். வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சத்துக்குக்கீழ் இருந்தால், 90% வரை கடன் கொடுக்கலாம் என்பது ஆர்.பி.ஐ விதிமுறையாகும். மேலும், வீட்டில் மேற்கொள்ளும் அலங்கார வேலைகள், அலமாரி மரவேலைப்பாடுகள் போன்ற இதர வேலைகளுக்கான செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அந்தத் தொகைக்கும் கடன் பெறலாம்.
கடனுக்கான வட்டி அதிகரித்தால்…
வங்கிகளும், வீட்டு வசதி நிறுவனங்களும் ஃப்ளோட்டிங் விகிதத்தில், வட்டி அதிகரித்தால் செலுத்தும் மாதத் தவணைத் தொகையை நிலையாக வைத்துக்கொண்டு, கடனைக் கட்டி முடிக்கும் ஆண்டுகளை நீட்டிக்கின்றன. கடன் செலுத்தும் காலம் நீளும் நிலையில், இடையில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி கடனை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளிலேயே முடித்துக்கொள்ளலாம்.
எது ரிஸ்க்…நிலையான வட்டி, மாறுபடும் வட்டி?
மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்திருந்தால், ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை அதிகரிக்கும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி உயரும். அதே போல், வட்டியைக் குறைத்தால் கடனுக்கான வட்டி குறையும். எனவே, மாறுபடும் வட்டி விகிதம் ரிஸ்க்கானது எனச் சொல்ல முடியாது. நிலையான வட்டி விகிதத்தை விட மாறுபடும் வட்டி விகிதம் சுமார் 1.5% குறைவாக இருக்கும். இதன் மூலம் கணிசமாக வட்டி மிச்சமாகும்.
நிலையான வட்டி என்றால் கடன் காலம் முழுக்க ஒரே வட்டி விகிதம் இருக்கும் என நினைக்கிறார்கள். அப்படி இல்லை என்பது இப்போது விளங்கியிருக்கும். மாறுபடும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது. அந்த வகையில் கடன் கட்டுபவருக்கும் திடீர் கூடுதல் வரிச் சுமை ஏற்படாது. அதற்குப் பதில் கடன் கட்டி முடிக்கும் காலம் அதிகரிக்கப்படும். அந்த வகையில் வட்டியை மிச்சப்படுத்திக் கொடுக்கும் மாறுபடும் வட்டி விகிதமே சிறந்ததாக இருக்கும்.
முன்கூட்டியே வீட்டுக்கடனை அடைப்பது லாபமா?
தற்போதைய சூழ்நிலையில் கடனை முன்கூட்டியே அடைப்பது லாபகர மான விஷயமில்லை. காரணம், வீட்டுக் கடனுக்கான ஆண்டு வட்டி 7 சதவிகிதத் துக்குள்தான் இருக்கிறது. வீட்டுக் கடன் தவணை கட்டுவது நீண்ட கால நடைமுறையாகும். நீண்ட காலத்தில் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை ஆண்டுக்கு சுமார் 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் அளிக்கின்றன. எனவே, கடனை வேகமாக அடைப்பதைவிட அந்தத் தொகையை முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.