கிரெடிட் கார்டு உடன் யு.பி.ஐ- இணைத்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…
கிரெடிட் கார்டை வைத்து ஸ்வைப்பிங் இயந்திரம் உள்ள கடைகளில் மட்டும் தான் பொருள் வாங்க முடியும். இனி கிரெடிட் கார்டுகளை யு.பி.ஐ-யுடன் இணைப்பதன்மூலம் கூகுள் பே அக்கவுன்ட் வைத்திருக்கும் பெட்டிக்கடையில்கூட கிரெடிட் கார்டுமூலம் உங்களால் பொருள்களை வாங்க முடியும். உதாரணமாக, உங்கள் சேமிப்புக் கணக்கில் சுத்தமாகப் பணம் இல்லை.
கிரெடிட் கார்டில்தான் பணப்பரிவர்த்தனை செய்து நீங்கள் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டாக வேண்டும் என்கிற நிலையில், ஸ்வைப்பிங் இயந்திரம் வைத்திருக்கும் ஓரளவு பெரிய உணவகங்களில்தான் உங்களால் சாப்பிட முடியும். அந்த பில் தொகை உங்கள் பட்ஜெட்டுக்கு மீறியதாக இருந்தாலும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. ஆனால், கிரெடிட் கார்டை யு.பி.ஐ-யுடன் இணைப்பதன் மூலம், உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற சிறிய உணவகங்களில்கூட நீங்கள் சாப்பிட்டுவிட்டு கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பிவிடலாம்.
இது கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு மிகவும் நன்மை அளிப்பதாக இருக்கும். மாஸ்டர், விசா கிரெடிட் கார்டுகளுக்கும் யு.பி.ஐ மூலம் கடன் பெறும் வசதிகள் இணைப்பு வழங்கப்பட்டால் யு.பி.ஐ பரிவர்த்தனை இன்னும் உயரும். காரணம், ‘buy now pay later’ என்கிற முறையில் பலரும் பொருள்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் பல உள்ளன. அதாவது, மாஸ்டர், விசா கார்டுமூலம் பணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இந்த சேவையைப் பெறுபவரிடம் இருந்து 1-&2% கட்டணம் வசூலித்து அது சேவை தரும் நிறுவனத்துக்கு கட்டணமாகத் தரப்படும்.
ஆனால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அந்தக் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என இனிமேல்தான் முடிவாகும் என்பதால், கிரெடிட் கார்டுகள் யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதில் சுணக்கமான நிலையே காணப்படும்,
நமது கார்டு, மொபைல் திருடு போனால், அதைக் கொண்டு கிரெடிட் லிமிட்டில் மீதமுள்ள பணத்தைத் திருடிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாதவர்களிடம்,
வங்கியிலிருந்து பேசுவஸ்தாகக் கூறி, கார்டு எண், சி.வி.வி எண் உள்ளிட்ட வற்றை வாங்கி, ஓ.டி.பி-யும் வாங்கி பணத்தைத் திருடலாம். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இத்தகைய விஷயங்களில் கவனத்துடன் செயல் படுவது அவசியம்.