சொத்து வரி உயர்வால் அதிகரிக்கும் வீடு, கட்டட வாடகை..!
தமிழகம் முழுக்க சொத்து வரி உயர்வால் வீட்டு உரிமையாளர்கள், வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்கள், கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்கள், சொந்தக் கட்டடங்களில் அலுவலகங்களைக் கொண்டிருப்பவர்கள், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், வாடகைக் கட்டடங்களில் அலுவல கங்களைக் கொண்டிருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கூடுதல் வரி கட்ட வேண்டியிருக்கும். நீண்ட காலமாக அதிகரிக்காமல், ஒரே நேரத்தில் அதிகரிப்பதால் சுமையாகத் தெரிகிறது. இந்தச் சொத்து வரி உயர்வால் கண்டிப்பாக, இதன் விகிதாசாரத்துக்கேற்ப வீட்டு வாடகை மற்றும் கட்டட வாடகை அதிகரிக்கும் என்பதே முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு நிதி ஆண்டில் குறிப்பிட்ட சொத்தின் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் சொத்தின் ஆண்டு மதிப்பு (Annual value of Property) எனப்படுகிறது. இந்தத் தொகையிலிருந்து உள்ளாட்சி அமைப்புக்கு அந்த ஆண்டில் கட்டிய சொத்து வரியைக் கழித்துக்கொண்டு வருமான வரி கட்ட வேண்டும். உள்ளாட்சி மதிப்பு, வாடகை ரசீது எது குறைவோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கு வருமான வரி கட்ட வேண்டும்.
ஆனால், சொந்த வீட்டில் குடியிருப் பவர்கள், சொந்தக் கட்டடங்களில் அலுவலகம் வைத்திருப்பவர்களுக்கு வாடகை வருமானம் வராது என்பதால் அவர்கள் அதிகரிக்கப்பட்ட முழு சொத்து வரியையும் கட்டிதான் ஆக வேண்டும். அது அவர்களுக்குக் கூடுதல் சுமையாக அமையும். வாடகைக்கு விட்டிருப்பவர்கள், அதிகமாக சொத்து வரி கட்ட வேண்டியிருக்கும். இந்த நிலையில் அவர்கள், அதை ஈடுகட்ட வாடகையை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும்.
வீட்டை வாடகைக்கு விடாமலும் சொந்தப் பயன் பாட்டுக்கு வைக்காமலும் இருப்பவர்கள் சொத்து மற்றும் வாடகைக்கு விடப்பட்டதாகக் கருதிக்கொண்டு (National Income) அதற்கான வருமான வரியையும் கட்ட வேண்டியிருக்கும். இதனால், கூடுதல் வரி கட்ட வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்!