8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் தூக்கம் என உலகம் முழுவதும் இருந்த தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக தான் எல்லா நாடுகளிலும் 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு 12 மணி நேரம் பணியாற்றுவது தொடர்பான சட்ட மசோதாவை ஏப்ரல் 21ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி, தினமும் 12 மணி நேர வேலை, வாரத்தில் 4 நாள் பணி, 3 நாள் விடுமுறை, வாரத்தில் 5வது நாளில் தொழிலாளி விரும்பி பணியாற்றினால் கூடுதல் ஊதியம் என்ற வகையில் மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது தான் இந்த ஒட்டுமொத்த சட்டமசோதாவின் மையக் கருவாக இருக்கிறது.
இந்திய அளவில் இதுவரை எந்த மாநிலமும், ஏன் மத்திய அரசே அமல்படுத்தாத ஒரு சட்டத்தை முதல் ஆளாக தமிழக அரசு நிறைவேற்றி இருக்கிறது என்பது தான் இங்கே எழுந்திருக்கும் கேள்வி. தேசிய அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் குறிப்பாக அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தின் 2-ம் கட்ட நகரங்களில் கூட டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு இருக்க தமிழகத்திற்கு வர விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலில் வைக்கும் கோரிக்கையாக இந்த பணி நேர நெகிழ்வுத் தன்மைதான் இருக்கிறது என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இதை முதலில் அமல்படுத்தும்போது மற்ற மாநிலங்களுக்கு முன்பாக, நாம் அந்த முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பது தான் தமிழக அரசின் வாதமாக இருக்கிறது.
8 மணி நேர வேலை திட்டத்தில் கொண்டு வரப்படும் எந்த சிறிய மாற்றமும், அடிப்படை உரிமையை தகர்த்துவிடும் என்பதுதான் இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் பதிலாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் 8 மணி நேர வேலை, 6 மணி நேரமாக குறைய தானே வேண்டும். அதை 12 மணி நேரமாக எப்படி மாற்றுவீர்கள் என்று கேட்கின்றனர் மசோதாவை எதிர்ப்பவர்கள்.
12 மணி நேர வேலை என்பதை நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். நிறுவனங்களும் கட்டாயப்படுத்த அனுமதிக்க மாட்டோம். தொழிலாளர்கள் விரும்பினால் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் அமல்படுத்துவோம் என அரசு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் 12 மணி நேர வேலையை அமல்படுத்தும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படும் என்றும், வாரத்தில் 48 மணி நேர வேலை என்ற கட்டமைப்பில் எந்த வகையிலும் மாறாது என்றும், மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்பதான் இந்த நெகிழ்வுத் தன்மையை கொண்டு வருகிறோம் போன்ற வாதங்களை அரசு முன்வைக்கிறது.
தொழிலாளர் நல சட்டங்கள், அதற்கான ஆணையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் தமிழகம் இதுவரை முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரியம் அமைத்த முதல் மாநிலமும் தமிழகம் தான். அப்படியிருக்க, மாறி வரும் சூழலுக்கேற்ப வேலை நேர நெகிழ்வுத் தன்மை என்று அரசு ஒருபுறம் சொன்னாலும், மற்றொரு புறம் இது ஒரு பெரிய உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்று இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, அதிமுக போன்ற கட்சிகள் சொல்கின்றனர்.
“ஒர்க் ப்ரம் ஹோம்” கலாச்சாரம் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் 12 மணி நேர வேலை என்ற திட்டம் தொழிலாளர்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்த திட்டம் அமலாகும்போதுதான், அதை கையில் எடுக்கப்போகும் நிறுவனங்கள், தொழிலாளர்களின் எதிர்வினை, இவை அனைத்தை பற்றியும் முழுமையாக தெரியவரும்.
இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனைச் சரியாக அமைப்பதும், பயன்படுத்துவதும், ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதை உணர வேண்டும். இந்த 12 மணி நேர வேலைக்கான சட்டம் என்பது தொழிலாளர்களுக்கான சலுகையா? நிறுவனங்களுக்கான சவுகரியமா? என்பதுதான் விளக்க முடியாத கேள்வியாக உள்ளது.