பணம் மட்டும்தானா பிரச்னை…?
வாழ்க்கையை அமைப்பது எண்ணங்களே. ஆம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பது எண்ணங்களே. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றி தோல்வி அமைகிறது.
நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு சிந்திப்பவன் வெற்றி பெறுகி றான். தன்னம்பிக்கை இல்லாத எண்ணம் தோல்வி அடைகிறது.
“ஒரு மான் குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. குட்டிகளைப் பெற்றெடுத்த பின்பும், தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே அந்த மான் வசித்து வந்தது. அந்த குகை சிங்கம் வசிக்கும் குகையாகும். பல நாட்களாக அந்த சிங்கம் குகைக்கு வரவில்லை. வேறு காட்டிற்கு சென்றிருந்த அந்த சிங்கம் திடீரென ஒருநாள் அந்த குகைக்கு வந்தது.
பொதுவாக மான்கள் சிங்கத்தை கண்டால் பயந்து ஓடும். ஆனால் இந்த மான் தைரியம் கொண்ட மானாக திகழ்ந்தது. சிங்கத்தைக் கண்டவுடன் பதட்டம் அடையாமல் தன் குட்டிகளிடம், சிங்கம் அருகில்வந்ததும், சிங்கத்தின் கறி வேண்டும் என சத்தமாக கத்துமாறு கூறியது.
சத்தத்தை கேட்ட சிங்கம், பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது. பின்னர் எவ்வித பிரச்சனையும் இன்றி அந்த மான் தனது குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது” எண்ணம் போல் வாழ்வு என்பதற்கு இந்த கதை சிறந்த உதாரணம்.
சிங்கத்தைக் கண்டால் பயப்படும் சுபாவம் கொண்ட மான் இனத்தில் பிறந்த ஒரு மான், தனது தைரியமான எண்ணத்தின் துணை கொண்டு, காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை விரட்டியடித்தது முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.
தைரியமும் தன்னம் பிக்கையும் இருந்து விட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். என்னிடம் பணம் இல்லையே… என்னால் எப்படி வெற்றி பெற முடியும் என்று புலம்புபவர்கள் ஏராளம். உண்மையில் பிரச்சனை என்பது பணத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது. பாஸிட்டிவ் சிந்தனைகளை மனதில் வளர்த்தெடுப்பவர்களுக்கு பணம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை.