ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி! சர..சர…சரவென சரிகிறது!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட் நாயக்கம்பட்டி கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக சலங்கை செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு வடிவமைக்கப்படும் பித்தளைச் சலங்கைகளுக்கு தனி மவுசு இருக்கிறது,
34 வகையான வேலைபாடுகளில் சோழங்கச்சம், மண்டகச்சம், பல்லுமணி, ஆலாட்சிமணி என 12 வகையான சலங் கைகள் இங்கு செய்யப்படுகின்றன. கோயில் காளைகளுக்கு நாக்குமணி, வாழைக் காய்மணி என பல வகையான சலங்கை தயாரிக் கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் சலங்கைகள் தான் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு கோயில் திருவிழாக்களிலும், கலை நிகழ்ச்சிகளிலும், நாட்டுப்புற நிகழ்ச்சிகளிலும், சாமி ஆட்டங்களிலும், பரதம் போன்ற நாட்டியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாது ‘ஜல்லிக்கட்டு’ மாடுகளுக்கு அணியப்படும் சலங்கைகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கண்ணகியின் சிலம்பின் வடிவத்தில் சிலம்பை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கண்ணகியின் காற்சிலம்பு, மதுரை மாரியம்மன் கோவில் பகுதிகளில் இன்றும் சிறப்புக்குரிய விற்பனை பொருட்களில் ஒன்றாக அனைத்து மக்களும் வாங்கி செல்லும் வண்ணம் உள்ளது. வெங்கட் நாயக்கம்பட்டி சிலம்பு தாருங்கள் என்று பலரும் கேட்டு வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு தென்னிந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் சலங்கைகளை உற்பத்தி செய்யும் பாரம்பரிய பண்பாட்டு மையமாக வெங்கட் நாயக்கம்பட்டி விளங்குகிறது என்றாலும் இந்த சலங்கை செய்யும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிட, தலைமுறை தலைமுறையாக சுமார் 33 குடும்பங்களுக்கும் மேல் இந்த தொழி லை நம்பி இருந்த நிலையில் தற்போது வெறும் ஐந்து குடும்பங்களில் மட்டுமே பாரம்பரிய சிலம்புகளையும், சலங்கைகளையும் செய்து வரும் நிலைக்கு அருகியுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் சலங்கை விற்பனை குறைந்து இருக்கும் நான்கைந்து குடும்பங்களும் மாற்றுத் தொழிலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சலங்கை தொழில் செய்து வரும் வெங்கட் நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி நம்மிடம் கூறுகையில், “நான் டி.எம்.இ. முடித்திருக்கிறேன், எனது குடும்பம் பூர்வீகமாக சலங்கை தயாரிக்கும் தொழிலையே செய்து வருகிறது, நானும் படிக்கும் பொழுது இந்த வேலையில் ஈடுபட்டு இருந்தேன். படித்து முடித்தவுடன் இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வேறு தொழிலுக்கு என்னுடைய பெற்றோர்கள் போகச் சொன்னார்கள். ஆனால் எனக்கு எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை, இது மட்டுமல்லாது எங்கள் பகுதியில் பலர் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். பலரும் கிடைத்த வேலைக்கு வெளியூருக்குச் சென்று விட்டனர்,

நான் பரம்பரைத் தொழிலை மேற்கொள்ளலாம் என்று சலங்கை தொழிலையே செய்து வருகிறேன். தமிழகத்தில் கும்பகோணம் அடுத்து எங்கள் பகுதியில் தான் பரம்பரை தொழிலாக இதை செய்து வருகிறோம். தற்போது கும்பகோணத்திலும் சலங்கை செய்யும் தொழிலை கை விட்டுவிட்டார்கள். அதனால் எங்கள் பகுதியில் நான்கைந்து குடும்பம் தான் இந்த தொழிலை செய்து வருகிறோம். மதுரையிலிருந்து பித்தளை வாங்கித் தான் நாங்கள் சலங்கை, சிலம்பு செய்கிறோம். பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக பித்தளை விலை கிலோ 280 ரூபாயிலிருந்து 405 ரூபாய்க்கு உயர்ந்து விட்டது. பித்தளை சலங்கை அதிகபட்சமாக கிலோ ரூ.510க்கு தான் விற்பனை செய்ய முடிகிறது. உயர்ந்துள்ள பித்தளை விலைக்கு ஏற்ப நாங்கள் சலங்கை விலையை உயர்த்தினால் வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள்.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம், புதுக்கோட்டை போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வியாபாரிகள் மூலம் நாங்கள் தயாரிக்கும் சலங்கை மற்றும் சிலம்புகளை விற்று வருகிறோம். தை, மாசி காலங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வந்த வேலையில் இரவு பகலாக சலங்கை செய்யும் ஆர்டர் வரும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதால் சலங்கை விற்பனை பெருமளவு குறைந்து போயுள்ளது. கோவில்கள் மூடப்பட்டு, திருவிழாக்கள் குறைந்து போனதாலும் வருவாய் குறைந்துள்ளது.
இப்போதுள்ள நிலையில் நாங்கள் தொடர்ந்து இந்த தொழிலில் தொடர வேண்டும் என்றால் சலங்கைக்காக நாங்கள் வாங்கும் பித்தளைக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். சலங்கை தயாரிப்பதை ஒரு தொழிலாக பார்க்காமல் ஒரு பாரம்பரிய கலையாக பார்த்தால் மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் ஏதாவது ஒரு வகையில் எங்களுக்கு மானியத்துடன் கடனுதவி ஏதாவது செய்து கொடுத்தால் எங்களால் இந்த தொழிலில் நீடித்து நிலைக்க முடியும்” என்றார்.
ஜல், ஜல் என ஒலிக்கும் சலங்கை ஒலி நம் காதுக்கு இனிமையும் மனதிற்கு மகிழ்வையும் தருவது போல் அதை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் தர வேண்டும். அப்போது தான் சலங்கை ஒலியின் இனிமை காற்றுள்ள காலம் வரை நிலைத்திருக்கும்.
-இப்ராகிம்