தீபாவளிக்கு மாருதி ஸ்விஃப்ட் கார்.. டூ வீலர்! ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்த பிரபல நகைக்கடை அதிபர்
தீபாவளிக்கு மாருதி ஸ்விஃப்ட் கார்..
டூ வீலர்! ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்த பிரபல நகைக்கடை அதிபர்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஓட்டி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், டூ வீலர், என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரான ஜெயந்திலால் சலானி.தீபாவளிக்கு ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ்களை மட்டுமே ஊழியர்களுக்கு பரிசாக வழங்கும் முதலாளிக்கு மத்தியில், ஜெயந்திலால் சலானி சற்று தாராளம் காட்டி அசர வைத்திருக்கிறார். குடும்பத்தினருடன் ஊழியர்களை வரவழைத்து கார் மற்றும் டூவிலர் சாவிகளை வழங்கி அவர்களை தீபாவளி பம்பர் பரிசு மழையில் நனைத்திருக்கிறார் சலானி.
நகை வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்திலால் சலானி, சென்னை தியாராயர் நகரில் சலானி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இதில் 200 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களில் சிறப்பாக பணியாற்றக் கூடிய 30 பேருக்கு மட்டும் தீபாவளியை ஓட்டி மாருதி ஸ்விஃப்ட் கார், டூவிலர் என விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவித்துள்ளார். இந்தாண்டு கார் டூவிலர் வாங்கிய 30 பேரை முன் மாதிரியாக கொண்டு அடுத்தாண்டு இன்னும் பலர் அந்தப் பரிசுகளை வாங்க ஊக்கமுடன் உழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உழைத்தால் உயர்வுண்டு என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் தான் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. இதனிடையே கரும்பை பிழிந்து சாறு எடுத்துவிட்டு சக்கையை தூக்கிவீசுவது போல் செயல்படும் முதலாளிகளுக்கு மத்தியில், உழைப்பாளிகளையும் உயர்த்தி விடும் எண்ணம் கொண்ட பலர் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணமாக அமைந்துள்ளது.