1996 – பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். மாலை நேரகல்லூரியில் சேர்ந்து பகுதி நேர வேலையில் சேரலாம் என முடிவு செய்திருந்தேன்.
ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு ஒரு தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி முதல்வர் வந்து, “ஹோட்டல் மேனேஜ்மென்ட்“ படிப்பு பற்றி விளக்கினார், நான் வீட்டில் வந்து அதைச் சொன்னேன், அப்பா, மாமாவிடம் விவாதித்துள்ளார். பிறகு நல்ல கல்லூரி. அரசு உணவுக்கலை நிறுவனம் எனக் கூறி என்னை அங்கு விண்ணப்பிக்க செய்து சேர்த்துவிட்டதால் அங்கு மூன்றாண்டு பட்டயப் படிப்பை படிக்கத் தொடங்கினேன்.
முதல் நாள் எங்களிடம் கேட்ட கேள்வி, ”ஏன் இந்த படிப்பை எடுத்தீர்கள்?“ என்பதேயாகும். நான் சொன்ன பதில், “விரைவில் ஆசிரியர் பணியில் சேர இந்த படிப்பு உதவும்“ என்றேன். ஆனால் படித்து முடித்து ஓராண்டிலேயே ஆசிரியப் பணியில் சேருவேன் என்று அப்போது எனக்குத் தெரியாது தான்.
படிப்பின் முதல் நாள் ஒவ்வொரு ஆசிரியரிடமும் நாங்கள் எங்களைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் சுத்தத்தை பற்றியும் வாழ்க்கையை பற்றியும் சொல்லித் தந்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்ற நான் முதலில் இங்கிலீஷ் பேச தயங்கி மனப்பாடம் செய்து சொன்ன வரிகள் இரண்டேவரிகள் தான்.
My Name is Kapilan, I am coming from Srirangam. அவ்வளவு தான். என் வீடு திருவானைக்கோவிலில் இருந்தது, ஆனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த சக மாணவர்கள், தமிழ் அறியாத ஆசிரியர்கள் இவர்களில் யாராவது Where is திருவானைக் கோவில் என்று ஆங்கிலத்தில் கேட்டுவிட்டால், எனக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல வராது என்பதால் அனைவருக்கும் தெரிந்த ஸ்ரீரங்கத்தை என் வசிப்பிடமாக்கிக் கொண்டேன். இப்படி இங்கிலீஷ் மிரட்சியில் தொடங்கிய படிப்பு போகப் போக பேசிப்பேசி இங்கிலீஷும் வந்துவிட்டது, ஆம் ஆங்கிலமும் நாப்பழக்கம் தானே.
இன்று வேலை மட்டுமல்லாமல், பலருக்கு இங்கிலீஷில் பேசுவது எப்படி என சொல்லித் தரும் அளவுக்கு என்னை தேற்ற முதல் காரணம் என் படிப்பும் கல்லூரியும் தான். அதற்காக எனது அனைத்து ஆசிரியர்களுக்கும் இங்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பன்னாட்டு பயணிகளுக்கு விருந்தோம்பல் செய்ய அவசியமான ஆங்கிலத்தை உணவுக்கலை நிறுவனம் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. அது மட்டுமா இன்னும் எனக்கு எவ்வளவு வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்துள்ளது என தொடர்ந்து பார்ப்போம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் படித்தால் நிறைய தொழில் துறைகளில் வேலை கிடைக்கும். ஆனால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
நாம் அனைவரும் பொதுவாக கேட்டரிங் என்று இந்த படிப்பை சொல்கிறோம். கேட்டரிங் என்றால் உணவைப் பற்றி மட்டும் படிப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை செய்வது ஆகும். ஆனால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒரு ஹோட்டலின் முழு நிர்வாகம் பற்றி அறிய பல துணைப்பாடங்களும் சேர்ந்து படிப்பதாகவும் முக்கியமாக நான்கு பாடங்களும் கருதப்படுகின்றன. அவையே வேலைக்கு செல்ல உதவும் துறைகளாகவும் கருதப்படுகின்றன.
Food Production எனப்படும் சமையல் தயாரிப்புத்துறை, F&B Service எனப்படும் பரிமாறும்துறை, Front office எனப்படும் முன் அலுவலகத்துறை மற்றும் Housekeeping எனப்படும் பராமரிப்புத்துறை ஆகியவையாகும். இந்த துறைகளில் எந்தெந்த தொழில் துறைகளில் எல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை இனி வரும் இதழ்களில் காண்போம்.
-தமிழூர் இரா.கபிலன்
முந்தைய தொடரை வாசிக்க..
சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… உணவக மேலாண்மை தொடர் – 1