நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம், ஆனால் சாப்பாடு போட்டே சம்பாதிக்கும் தொழில் உணவுத் தொழில், இந்த தொழிலின் முதல் மூலதனம் சுத்தம்தான். நான் விடுதி மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பக்கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எனக்கு சொல்லித் தந்தது சுய சுத்தம்தான். தலை முடி குறைவு, தினசரி முகமளிப்பு, நகம் குறைப்பு, சுத்தமான கசங்காத ஆடை, பளபளவென மின்னும் கால் மூடும் காலணி என பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது, ஆனால் அதுவே இரண்டாமாண்டு படிக்கும்போது இளவல்களுக்கு நாங்களே சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டோம். இப்படி சுய சுத்தத்தில் தான் விடுதி மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்ப படிப்பு தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, இடசுத்தம், சுற்றுப்புற சுத்தம் என படிப்பின் அடிப்படை பக்கங்கள் சுத்தம் என்பதை வலியுறுத்துகிறது.
அதனைத் தொடர்ந்து, மரியாதை, பணிவு, நற்சொற்கள் போன்றவற்றின் மூலம் விருந்தோம்பல் சேவையை சிறப்பாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தந்து வாழ்வியலின் அவசியத்திற்கு தேவையான எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் இந்தப் படிப்புக்கு எப்பொழுதுமே மவுசு தான்… அதிலும் கொரோனா காலத்துக்குப் பின் மக்களின் பயணங்கள் அதிகரிப்பதால், ஹோட்டல் தொழிலின் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது, அதனால் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.
எத்தனை ஹோட்டல் துறை கல்லூரிகள் இருந்தபோதும் இன்றைய சூழலில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. இந்தப் படிப்பு பல சுவாரசியங்களை உள்ளடக்கியது, பல வகையான தொழில், மற்றும் வேலைவாய்ப்புகளை அள்ளித் தருகிறது. அத்தனைக்கும் ஆதாரம் சுத்தம்தான்.
‘சுத்தம் சோறு போடும்’ என்பார்கள். ‘அப்ப சாம்பார் யார் ஊத்துவாங்கன்னு’ கேலியாக சிலர் கேப்பாங்க, அவங்களுக்கு நான் சொல்லும் பதில், ‘சுகாதாரம் ஊத்தும்’. சும்மா கை கழுவினா சுத்தம், சோப்பு போட்டு கை கழுவினா சுகாதாரம், தண்ணி ஊத்தி வாசல் தெளிச்சா சுத்தம், சாணமிட்டு வாசல் தெளிச்சா சுகாதாரம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…
Hotel Management & Catering Technology படிப்பின் சுவாரசியங்கள், நிகழ்வுகள், பல உண்மைத் தகவல்கள், சில சவால்கள் ஆகியவ்ற்றுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்புகளைப் பற்றி இனிவரும் இதழ்களில் தொடர்வோம்…
-தமிழூர் இரா.கபிலன்