செல்வம் பன்மடங்கு பெருக..
முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது…ஒரு நல்ல முதலீட்டாளர் எப்போதும் நீண்ட கால முதலீட்டுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில், கூட்டு வருமானத்தின் செயல்திறன் காலப்போக்கில் தான் அதிகரிக்கிறது. ஒருவர் நிறுவனத்தின் பங்கு விலையில் கவனம் செலுத்தும் முன், அதன் அடிப்படை சொத்து மதிப்பை மதிப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும்.
பங்கு விலையானது நிறுவன வருவாயுடன் ஒப்பிடுகையில் அதிலிருந்து பின்தங்கியதாக இருக்கலாம். அதாவது, குறுகிய காலத்தில் அது ஏற்ற இறக்கமாக இருக்கலாம்; ஆனால், நீண்ட காலத்தில் அந்த நிறுவனத்தின் சொத்து ஈட்டும் வருவாய்த் திறன் அடிப்படையில் பங்கு விலையும் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.
முதலீட்டாளர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சொத்து ஒதுக்கீடும், முதலீட்டைப் பரவலாக்குவதும்தான். உங்களுடைய முதலீடுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அவை குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே குவிந்திருந்தால் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஏனெனில், அனைத்துத் துறைகளுமே மேக்ரோ மற்றும் மைக்ரோ பொருளாதார மாற்றங்களால் பாதிக்கப்படும் தன்மை உடையவைதான்.
சந்தைகளில் முதலீடு செய்யும் முன், ஒருவர் தனது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஒரு நல்ல முதலீட்டாளருக்கு மிக முக்கியமானது, பொறுமை. சந்தை சென்டிமென்ட், நண்பர்கள், நிபுணர்கள் பார்வை போன்ற பல்வேறு வெளிப்புற அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன் இருக்க வேண்டும். பங்கு பற்றிய அடிப்படை அறிவு, உறுதியான நம்பிக்கையுடன், பொறுமையாக நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே செல்வத்தை உருவாக்கும் ஒரே வழி ஆகும்.’’