கூகுள் தளத்தின் புதிய வசதி..!
கூகுளின் சேவைகளான மேப்ஸ், ஜிமெயில், தேடல், புகைப்படங்கள் ஆகியவற்றை ஒருவர் பயன்படுத்தினால் அவரைப் பற்றிய ஏராளமான தரவுகள் அங்கே இருக்கும். சிலர் கூகுள்பே உள்ளிட்ட செயலிகளில் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையும் கூட சேமித்து வைத்துள்ளனர்.
ஒருவர் தனது மரணத்திற்குப் பிறகு, கூகுளில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை என்ன செய்யலாம் என்பதற்கு கூகுள் தளம் ஒரு வசதியை செய்துள்ளது. ஒருவர் தனது நம்பிக்கைக்குரியவருடன் தனது கணக்கு மற்றும் இதர தரவுகளைப் பகிரலாம். அல்லது செயல்பாடு நீண்ட நாட்களுக்கு இல்லையென்றால், தானாக அத்தனை தரவுகளும் அழிந்து விடுமாறும் தேர்வு செய்யலாம். இந்த இரண்டு தேர்வுகளில் ஏதோ ஒன்றை நாமே திட்டமிடலாம். மேலும் கூகுள் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்றும் நாமே நிர்ணயிக்கலாம். அதாவது அதிகபட்சம் 18 மாதங்கள் வரை காத்திருக்குமாறு திட்டமிடலாம். myaccount.google.com/inactive என்கிற இணைப்பில் இதைச் செய்யலாம்.
இந்த இணைப்பில், செயல்பாடு இல்லை என்று முடிவு செய்ய எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிற விவரத்தை உள்ளிட வேண்டும். பின் மின்னஞ்சல், மொபைல் எண் உள்ளிட்ட இதர விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பிறகு, ஒருவரின் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்பதை கூகுள் கண்டறிந்த பிறகு அதை யாருக்கெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். அதிகபட்சம் 10 பேர் வரை இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
மேலும் எந்தெந்தத் தரவுகளை நம்பிக்கைக்குரிய நபர் பார்க்கலாம், பதிவிறக்கம் செய்யலாம் என்பதையும் ஒருவர் முடிவு செய்யலாம். இதற்கு அந்த நபர் இன்னொரு நபரின் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
யாரும் ஒருவரது கூகுள் தரவுகளைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தால் யாருடைய மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிட வேண்டாம். ஆனால், இப்படிச் செய்தால், செயல்பாடு நின்ற பிறகு கூகுள் தானாக அவரது தரவுகளை அழித்துவிடும். யாராலும் அதை மீட்க முடியாது.
ஒருவர் தனது நம்பிக்கைக்குரிய நபரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடும் பட்சத்தில், அவரிடம் எந்தெந்தத் தரவுகளையெல்லாம் பகிர வேண்டும் என்று அவரே தேர்வு செய்யலாம். இப்படி நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அவரது கணக்கின் தரவுகள் கிடைக்குமென்றாலும், அது வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்கும். இதை தேர்வு செய்யும்போது, நம்பிக்கைக்குரிய நபருக்கென நாம் எழுதி வைத்திருக்கும் செய்தி இ-மெயில் வடிவில் அவருக்குச் சென்று சேரும்.
ஒரு வேளை ஒருவர் தனது அத்தனை தரவுகளையும் அழிக்க வேண்டும் என்று தேர்வு செய்திருந்தால், செயல்பாடு நின்ற பிறகு, அவரது தேர்ந்தெடுத்த கால அளவுக்குப் பின், யூடியூப் வீடியோக்கள், தேடல் விபரங்கள், கூகுள் பே விவரங்கள் உள்ளிட்ட அத்தனையும் அழிக்கப்படும்.