வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 10 ….
வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 10 ….
பிசினஸ் தொடங்கும் முன், பிசினஸிக்கு அவசிய தேவை என்னவென்று பார்க்கலாமா? முதலீடு, அனுபவம், இடம், இவற்றையெல்லாம்விட முக்கியமானது பிசினஸ் ஐடியா! ஆம், ஐடியாதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது. வெறும் ஐடியாவை மட்டும் வைத்துக் கொண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சில ஆச்சரிய நிறுவனங்களை பார்த்தால் இது நமக்கு சுலபமாக புரியக்கூடும். இவற்றை “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் என்று அடையாளப்படுத்துவார்கள். இதில் குறிப்பிடத்தகுந்த நிறுவனம் “Airbnb”
வாடகை தர காசில்லை, என்ன செய்யலாம்? நண்பர்களிடம் கடன் வாங்கலாம்.., ஏதாவது விலை மதிப் புள்ள பொருளை விற்கலாம்.., அடகு வைக்கலாம்.., வீட்டு சொந்தக்காரரிடம் இன்னும் பத்து நாள் டைம் கேக்கலாம். இப்படி வாடகைதர இயலாமல் சிரமப்படுவது அவமானகரமான விஷயம்தான். ஆனால், என்ன செய்ய? வீடில்லாமல் வாழ முடியுமா? உணவு, உடை, உறைவிடம் என அடிப்படை தேவைகளில் அதுவும் ஒன்றாயிற்றே!
ப்ரையன், ஜோ இருவரும் யோசித்தார்கள். எப்படியாவது இந்த வாடகை பிரச்சினையை தீர்த்தாக வேண்டும்.., அதுவும் உடனே..! அப்போது அவர்கள் ஊரில் (சான்ஃபிரான் சிஸ்கோ) ஒரு தொழில்நுட்ப கருத்தரங்கம் ஏற்பாடாகியிருந்தது. அதற்காக பல நகரங்களை சேர்ந்தவர்கள் அங்கே வந்து குவிந்திருந்தார்கள். எல்லா விடுதிகளும் ஹவுஸ் ஃபுல். இதைக் கவனித்த போது, அவர்களுக்கு ஒரு யோசனை பிறந்தது.
‘நம்ப வீட்ல ஒரு அறை சும்மாதானே இருக்கு, அதை வாடகைக்கு விட்டா என்ன?,
‘வாடகைக்கா ?’
‘ஆமா, ஒரே ஒரு நாள் மட்டும் வாடகை, ராத்திரி தங்கிக்கலாம், காலையில் டிபனும் உண்டு. சாப்பிட்டுவிட்டு கிளம்பிட வேண்டியதுதான். வாடகை நாற்பது டாலர்’. ‘இத்தனூண்டு அறைக்கு நாற்பது டாலரா, எவன் கொடுப்பான்?’
‘ஊர்ல எல்லா ஹோட்டலும் நிரம்பியிருக்கு, இந்த கருத்தரங்குக்கு வர்றவங்கள்ல தங்கறதுக்கு அறையில்லாம தவிக்கறவங்க பலர் இருப்பாங்க, அவங்கல்ல யாராவது இங்கே வரலாமே!, ‘வருவாங்களா?’ ‘முயற்சி செஞ்சு பார்ப்போமே!’
அவர்கள் இருவரும் மளமளவென்று வேலையில் இறங்கினார்கள். அந்த அறையில் தங்கப் போகிறவர்களுக்காக மூன்று காற்று மெத்தைகளை எடுத்துப்போட்டார்கள். அதைப் புகைப்படம் பிடித்தார்கள், அந்தப் புகைப்படத்தை வைத்து ஓர் இணையத்தளத்தை உருவாக்கினார்கள். ‘எங்கள் அறையில் தங்க வாருங்கள்’ என்று அறிவித்தார்கள். யாராவது வருவார்களா என்று காத்திருந்தார்கள்.
உடனடியாக மூன்று மெத்தைகளும் நிரம்பிவிட்டன. அதாவது, மூன்று பேர் (அவர்களில் ஒருவர் இந்தியர்) அவர்களுடைய வீட்டில் தங்க விருப்பம் தெரிவித்திருந் தார்கள். ப்ரையனும், ஜோவும் அவர்களை வரவேற்று, உபசரித்து அனுப்பினார்கள். தலைக்கு நாற்பது டாலர் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்களுக்கு ஒரு பக்கம் ‘அட சும்மாக்கிடந்த அறைக்கு இவ்வளவு பணமா’என்று ஆச்சர்யம். இன்னொரு பக்கம், இதனால் வாடகைப் பிரச்சினை தீர்ந்த நிம்மதி!
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசித்த போது, அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த அறை நமக்குத்தான் ‘சும்மா’, வேறு ஊரிலிருந்து இங்கே வருகிறவர்களுக்கு இது ஓர் அவசிய தேவை. எல்லோரும் பெரிய விடுதிகளில் தங்க விரும்புவதில்லை. கொஞ்சம் சிக்கனமாக ஒரு ராத்திரிக்கு மட்டும் தூங்கி எழுவதற்கு ஓர் இடம் இருந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் பலர். இதுபோல் உலகமெங்கும் பல நகரங்களிலும் இந்த தேவை இருக்கத்தானே செய்யும்.
இந்த காலி அறைகளையும் அறை தேடும் மனிதர்களையும் இணைத்தால் என்ன? ஒரு பக்கம் ‘கொஞ்சம் கூடுதல் வருமானம் கிடைத்தால் பரவாயில்லை’ என்று நினைக்கும் வீட்டுக்காரர்கள். இன்னொரு பக்கம் ‘இன்று இரவு சிக்கனமாக எங்கேயாவது தங்கினால் கொஞ்சம் காசு மிச்சமாகுமே’ என்று நினைக்கும் பயணிகள். இவர்கள் இருவரையும் யாராவது அறிமுகப்படுத்தி இணைத்து வைத்தால் எப்படியிருக்கும்!
ஒருவர் வழக்கமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் ஹோட்டல் அறையில் ஒரு நாளைக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழிக்கிறவர், ஆனால், இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் தந்து ஒரு வீட்டில் தங்கிக்கொள்கிறார், அவருக்கு நான்காயிரம் மிச்சம். அதே சமயம், அந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் லாபம்.
இப்படி இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து, பணத்தை மிச்சப்படுத்தி தருகிற நிறுவனத்திற்கு அவர்கள் நூறு ரூபாய் கமிஷன் தரமாட்டார்களா என்ன? அதுதான் அவர்களுடைய திட்டம்!
பிரமாதமான ஒரு இணைய தளத்தை உருவாக்கினார்கள். இணையத்தளத்திற்கு அவர்கள் சூட்டிய பெயர் ” airbedandbreakfast.com ” அதாவது “காற்று மெத்தையும், காலை உணவும்” கொஞ்சம் வேடிக்கையான பெயர் தான். அதில் கவரப்பட்டே நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இணைய தளத்திற்கு வந்தார்கள்.
வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் காலியறைகளைப் பற்றிய விபரங்களை இதில் பதிவு செய்தார்கள். அந்த நகரங்களுக்கு வருகிறவர்கள் அவற்றைத்தேடி தங்களுக்கு பிடித்த இடங்களில் சென்று தங்கிக்கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, வெளியூர் போனால் ஹோட்டலில் இடம் தேடுவதற்கு பதில்‘‘Airbnb ‘™ (airbedandbreakfast சுருக்கம் ) தேடுவது பலருக்கு பழக்கமாகிப்போனது.
அடுத்த சில ஆண்டுகளில் Airbnb ஓர் அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்தது. உலகெங்கும் நூற்றுக்கணக்கான நகரங்களில் ஆயிரக்கணக்கான அறைகளைப் பட்டியலிட்டு பட்ஜெட் பிரியர்களையும், வித்தியாசமான பயணம் தேவை என்று விரும்புகிறவர்களையும் கவர்ந்திழுத்தது. வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்தி, தங்களுடைய சேவையை இன்னும் மேம்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் வழக்கமான ஹோட்டல்களைவிட அதிக அறைகளை பதிவு செய்கிற சேவையாக வளர்ந்தது.
மனிதர்களுக்கு இருக்கும் தேவைகளுக்கு தீர்வு கொடுக்கும் ஐடியா எதுவும் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கைதான் Airbnbயின் அடிப்படை. அந்த தேவைகளையும் அதற்கான தீர்வையும் அடையாளம் கண்டதால்தான் வாடகை தர காசில்லாமல் தவிக்கும் நிலையிலிருந்து உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல்வரை உயர்ந்தார்கள்.
நம்மை சுற்றியிருக்கும் சமூகத்தின் தேவையை அறிந்து, அதற்கான தீர்வையும் சொல்லும் ஐடியாவுடன் நாம் தயாரானால் ஒரு வெற்றிகரமான தொழில் நம் கைவசம். ஐடியாவை தாண்டி அடுத்தது என்ன? பேசுவோம்…
தங்களது மேலான கருத்துக்களை imagefelixrtn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்கிறோம்.