புகார் பெற வருமான வரித்துறையின் புதிய இணையதளம்..!
வருமான வரித்துறையுடன் பொதுமக்களின் கருத்துப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும், மின் ஆளுகையை வலுப்படுத்தவும் வருமானவரித்துறை புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள், வெளிநாட்டிலுள்ள ரகசிய சொத்துக்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கென மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
https://www.incometaxindiaefiling.gov.in/ என்னும் முகவரியில் உள்ள “File complaint of tax evasion/undisclosed foreign asset/ benami property” என்னும் தலைப்பில் தங்களது புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம். இந்த தானியங்கி பிரத்யேக இணையதளம், புகார்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை நடவடிக்கைக்காக அனுப்பும்.
புகாரை பதிவு செய்த பிறகு, ஒரு பிரத்யேக எண்ணை வருமான வரித் துறை அளிக்கும். அதன் மூலம் புகாரின் நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.
கைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் ஒருமுறை கடவுச்சொல்லை பெற்று, வருமான வரிச் சட்டம், கருப்பு பணச் சட்டம், வரி விதிப்புச் சட்டம், மற்றும் பினாமி பரிவர்த்தனைகள் சட்டம் ஆகியவற்றை மீறியது குறித்த புகார்களை இதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று தனித்தனி படிவங்கள் மூலம் அளிக்கலாம்.