வங்கி திவால் ஆனாலும் கவலை இல்லை!
இந்தியாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகியும், கடன் மோசடியிலும் சிக்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டிற்குக் கீழ் வருகின்றன. இதனால் திவாலான வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
கடந்த வருடம் மத்திய அரசு வங்கி டெபாசிட்களுக்கு அளிக்கப்படும் டிக் அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளவினை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தது. என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தான், ஒரு வங்கி ரிசர்வ் வங்கியின் மோரோடோரியம் கட்டுப்பாட்டிற்குள் வரும் பட்சத்தில் வங்கியில் டெபாசிட் அல்லது கணக்கு வைத்துள்ள மக்களுக்கு டிக் அமைப்பு அளிக்கும் ரூ.5 லட்சம் அளவிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் 90 நாட்களுக்குள் பணத்தை அளிக்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு உயர்த்தியதன் மூலம் வங்கியில் ஒருவர் ரூ.5 லட்சம் வரையில் எவ்விதமான அச்சமும் இல்லாமல் வைப்புச் செய்யலாம். வங்கி திவால் ஆனாலும் டிக் அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் ரூ.5 லட்சம் வரையிலான தொகை திருப்பிப் பெற முடியும்.
இப்புதிய சட்டத்தின் மூலம் பிஎம்சி வங்கி, யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற திவாலான மற்றும் மோரோடோரியம் கீழ் வைக்கப்படும் வங்கிகளின் வைப்பு நிதி டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.