பழைய ஓய்வூதிய திட்டம்… அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என அரசு ஊழியர்கள் கோருவதற்கு என்ன காரணம்? அப்படி என்னென்ன பலன்கள் என்பதை அறிந்துகொள்வோம்.
பழைய ஓய்வூதிய திட்டம் : 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் நடைமுறையில் உள்ளது.
கடன் : பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும்போது கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. பங்களிப்பு பென்சன் திட்டத்தில் அந்த வசதி கிடையாது.
பென்சன் : “பணி ஓய்வுபெற்ற பிறகு, நாம் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் நமக்கு பணத்தை கொடுத்துவிட்டார்கள் என்றால் பின்னர் எதுவும் கிடைக்காது”
குடும்ப பென்சன் : ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% தொகை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும்.
மற்ற பென்சன்கள் : பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.
வருங்கால வைப்பு நிதி : பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF) வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும். பங்களிப்பு பென்சனில் இவை எதுவுமே கிடைக்காது.
பணியின்போது இறந்தால்: அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.
அகவிலைப்படி பென்சன் உயர்வு : அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம் பென்சன் தொகையும் உயரும்.
மருத்துவப் படி : பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர மருத்துவப் படியாக 300 ரூபாய் கிடைக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் இந்த பணம் கிடைக்காது.
குடும்ப பாதுகாப்பு நிதி : பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும். இந்த பணம் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைக்காது.
கூடுதல் ஓய்வூதியம் : 80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்போருக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும். இந்த பணம் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைக்காது.