சிறு வணிகர்களுக்கு நன்மை தரும் ஓ.என்.டி.சி நெட்வொர்க்
ஓ.என்.டி.சி என்பது வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் டிஜிட்டல் நெட்வொர்க். இந்திய அரசாங்கம் தொடங்கியிருக்கும் திட்டம் இது. பால் பவுடர் முதல் முகத்துக்குப் போடும் பவுடர் வரை, வேஷ்டி முதல் டிவி ரிப்பேர் வரை ஆன்லைனில் இன்று நாம் ஆர்டர் செய்யும் அனைத்து அம்சங்களும் கிடைக்கும் இடம் இது.
ஆர்டர் செய்யத் தேவையான பொருள்கள் அனைத்தும் நம் வீட்டுக்கே வந்துகொடுக்கும் டெலிவரி கம்பெனிகள் வரை உள்ளடக்கிய சமாசாரம் இது. இந்த வேலையைச் செய்ய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கும்போது, இன்னொரு நிறுவனம் எதற்கு என்று கேட்கலாம். இப்போது இருக்கும் பெரிய நிறுவனங்கள் அதைச் சரியாகச் செய்து வந்தால் பிரச்னையே இல்லை. தங்கள் இணைய தளத்தில் பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு வேண்டிய கம்பெனி தயாரிக்கும் பொருள்களை மட்டுமே முன்நிறுத்திக் காட்டுவது, சிறிய வியாபாரிகள் தயாரிக்கும் பொருள்களை இருட்டடிப்பு செய்வது எனப் பல வேலைகளைச் செய்து வருகின்றன.
இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் சிறு வியாபாரிகள்தாம். அவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக வந்திருக்கிறது இந்த ஓ.என்.டி.சி. ஆன்லைன் கம்பெனிகள் சிறிய வியாபாரிகளிடம் அடாவடியாய் 25%- & 30% வரை கமிஷன் வாங்கிக்கொண்டிருக் கையில், ஓ.என்.டி.சி பிளாட் ஃபார்ம் அவர்களிடம் 3% – 5% மட்டுமே கமிஷன் வசூலிக்கிறது.
ஒரு பொருளை ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் தேடும் போது வேண்டியவர், வேண்டாதவர் என்கிற பாகுபாடு காட்டாமல், பொருள்களை மட்டுமே முன்நிறுத்திக் காட்டும். கோஃப்ரூகல் இ.ஆர்.பி-யானது ஓ.என்.டி.சி நெட்வொர்க்குடன் இணைந்து இந்தச் சேவையை சிறு வியாபாரிகளுக்கு அளித்து வருகிறது.