பி.ஏ.சி.எல். நிறுவன சொத்துக்களை ஆவண பதிவு செய்தால் கடும் நடவடிக்கை
பி.ஏ.சி.எல். என்ற நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி, அந்நிறுவனங்களின் இயக்குனர்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர்களில் சட்ட விரோதமாக அசையா சொத்துக்களை கிரயம் பெற்றுள்ளதாக, அந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சொத்து கைப்பற்றப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பால் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களில் கிரயம் பெறப்பட்ட 15,829 எண்ணிக்கையிலான சொத்து விவரங்கள், அந்த அமைப்பால் அனுப்பி வைக்கப்பட்டு, இச்சொத்துக்கள் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப் பட்டுள்ள நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின் முன் அனுமதியன்றி ஆவணங்கள் பதிவுக்கு ஏற்க கூடாது’ என தலைமை செயலாளர் மூலம் அனைத்து பதிவுத் துறை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது . இதன் பிறகும் தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில், தடை செய்யப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்கள் மீது ஆவண பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து பத்திரபதிவுத் துறை அலுவலகத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நீதிமன்ற ஆணைக்கிணங்க மத்திய புலனாய்வு அமைப்பால் பிஏசிஎல் நிறுவன சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கும் நிலையில், அவற்றின் மீது பதிவு நடவடிக்கை மேற்கொள்ளுதல் நீதிமன்றம் அவமதிப்புக்குரிய செயலாகும். இந்நிகழ்வில் ஏற்கனவே, இவ்வலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தவறாது செயல்படுமாறு அனைத்து பதிவு அலுவலர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது .
தடை செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எவ்விதமான ஆவணமும் பதிவு மேற்கொள்வதோ அல்லது பதிவு மேற்கொண்டதாக உரிய ஆதாரங்களுடன் பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு வரப்பெறின் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என எச்சரித்துள்ளார்