பருத்தி விளையும் பூமியில் பன்னீர் திராட்சை கொத்து கொத்தாக காய்ச்சு தொங்குகிறது. வயலிலேயே விற்பனையாவதால் ஏற்றுமதிக்கு வேலையில்லை.
பெரும்பாலும் மானாவாரி சாகுபடியைக் கொண்ட, பருத்தி அதிகம் விளையும் பெரம்பலூர் மாவட்டத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி என்பது நினைத்து கூட பார்க்கமுடியாத ஒன்றாகும். இருந்தும் நக்கசேலம் அருகேயும், பாடாலூரிலும் பல வருடங்களுக்கு முன்பு தலா ஒருவர் மட்டுமே பன்னீர் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தினருக்கு சேலம், பெங்களூரு, திருச்சி, திண்டுக்கல், தேனி பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்வதால் மட்டுமே இன்பமளித்து வந்த திராட்சைப் பழங்கள், எசனை கிராமத்தினருகே சாகுபடி செய்கின்ற வயலுக்கே நேரி்ல் சென்று, களைக்காமல் ரசித்து, ருசித்துக் சாப்பிடும் வரம் கிடைத்திருக்கிறது.
பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜன் (எ) பெருமாள்(50), பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில், அரசலூர் கைகாட்டி எதிரே, சாலையோரம் கிழக்கே உள்ள தனது வயலில் ஒரு ஏக்கா் பரப்பளவில் கொடி வகையான பன்னீர் திராட்சையை பந்தல் அமைத்து சாகுபடி செய்துள்ளார். வேரழுகல் நோய், சாம்பல் நோய் தாக்காமல் , ரசாயணக் கலப்பின்றி மருந்து தெளித்து, வாரா வாரம் தண்ணீர் பாய்ச்சி 15 மாதங்கள் பராமரித்தால், அழகு திராட்சை பழங்கள் அறுவடைக்குத் தயாராகி விடுகிறது.
இதற்காக சுருளிராஜன் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, ஏரக்குடியில் இருந்து விதைகளை வாங்கி வந்துப் பயிரிட்டுள்ளார். 15 மாதம் கழித்து அறுவடைக்குத் தயாராகும் பன்னீர் திராட்சை, அடுத்தடுத்த 4 மாதத்திற்கு 1 முறை அறுவடைக்கு தயாராகி விடுகிறது. நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தி்லும், மே, ஜூன் மாதத்திலும் அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது நடப்பாண்டிற்கு மூன்றாம் கட்டமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பந்தல்களில் கொத்து கொத்தாக காய்த்த குழுங்கும் பன்னீர் திராட்சை பழங்களின் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளன.
இதுகுறித்த சுருளிராஜன் கூறுகையில், பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பைக்குகளில், பஸ்களில் பயணிப்போர் அனைவருக்கும், பார்க்கும் போதே பரவசத்தை ஏற்படுத்துவதால் பன்னீர் திராட்சை பந்தல்களுக்கு இடையே புகுந்து செல்பி எடுத்து செல்வது பலரும் பர்சேஸ் செய்வதால், ஏற்றுமதிக்கு எந்த வாய்ப்புமே இல்லாமல் போய்விட்டது.
ரசாயண கலப்பின்றி உற்பத்தி செய்த திராட்சை பழங்கள் கிலோ ரூ.120க்கு என தினமும் 50 கிலோ முதல் 80 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.