காசோலை மோசடியை தடுக்கும் ‘பே பாசிட்டிவ் சிஸ்டம்’..!
வங்கியில் காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிமுறைகள் காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், குறிப்பாக வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும். இதன் மூலம் பெரும் மோசடிகள் தடுக்கப்பட வாய்ப்புண்டு.
வங்கியில் ரூ.50,000க்கு மேலான காசோலையை வழங்குபவர் காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை எஸ்.எம்.எஸ். (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம். இதன் பிறகு காசோலை செலுத்தும் முன் மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் தகவல் மிஸ்மேட்ச் ஆகிறது என்றால், அந்த பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.