ஜியோ காட்டும் அதிரடி பயத்தில் பேடிஎம், பஜாஜ்
கிரிக்கெட் போட்டிகளையே நடத்தும் அளவுக்கு பணம் படைத்த நிறுவனமாக ஒரு கட்டத்தில் வலம் வந்தது பேடிஎம் நிறுவனம்.பங்குச்சந்தைகளில் அதிகமாக விலை நிர்ணயம் செய்து அது பாதகமாக மாறிப்போனதால் ஏறிய வேகத்தில் பேடிஎம் நிறுவனம் சறுக்கியது. நிலைமை இப்படி இருக்க, மக்யூரி குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்த ஜியோ நிறுவனம் நிதி சேவைகளில் ஈடுபட இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஜியோ நிதி நிறுவனம் களத்துக்கு வந்தால் பே டிஎம் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் வணிகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று மக்யூரி நிறுவனம் கணித்துள்ளது.
நிலைமை சிக்கலானதால் தேசிய பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவன பங்குகள் 9.2 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் பேடி எம் நிறுவன பங்குகள் 23 % சரிவை சந்தித்துள்ளன. ஜியோ நிதிவணிகம் என்ற களத்துக்கு வந்தால் இந்தியாவின் 5வது பெரிய நிதி நிறுவனமாக உருவெடுக்க இருக்கிறது.
இந்தியாவில் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி,ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே பெரிய நிதி நிறுவனங்களாக உள்ளனர். ஜியோ உள்ளே வந்தால் நிச்சயம் பேடிஎம் வெளியேறிவிடும் என்றும் பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்