உழவர்களுக்கு நன்றி கூறும் பொங்கல் விழா!
உழவர்களுக்கு நன்றி கூறும் பொங்கல் விழா!
வந்தாரை வரவேற்பதும், அறவழி நிற்பதும், போர் அறம் பேணலும், நன்றியுரைப்பதும் வாழ்க்கை நெறி என்று கொண்டிருந்த நம் தமிழ்ச்சமூகம் பன்னெடுங்காலமாக போற்றிய நன்றி விழாவே பொங்கல் விழா. மேற்கத்திய நாடுகளில் ”தேங்ஸ் கிங்விங் டே” என்று ஒரு விழா கொண்டாடப்படுவதை இன்றைய சமூக ஊடகங்கள் பந்தி பரிமாறுவதைப் பலரும் கண்டிருப்போம். பண்டைய காலத்தில் முன்னோர்கள் செய்த ஒரே தொழில் உழவு தான். அதற்கு உதவியாக இருந்த சூரியன், மாடு மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகைதான் பொங்கல் விழா. அறுவடைத் திருவிழா தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல. எல்லாச் சமுதாயத்தினருக்கும் பொருந்தும்.
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனாலேயே பானையில் அரிசியையும், பாலையும் இட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று வீட்டில் உள்ள அனைவரும் ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விழாவாக அமைகிறது. காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக விளங்குவது பொங்கல் பெருவிழா.
ஔவைப் பிராட்டியார் இளவரசே வாழ்க பல்லாண்டு! என்று வாழ்த்தவில்லை! அரசே உன் வரப்பு உயர்க! என்று வாழ்த்தினார். ஏன் ?
வரப்புயர நீருயரும்! நீருயர நெல்லுயரும்! நெல்லுயுர குடியுயரும்! குடியுயர கோனுயர்வான்!.
அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த விழாக்காலமாக விதிக்கப்பட்டது என்பதும் பெருமை கொள்ளத்தக்கதே!
பொங்கல் மத விழா அன்று. நிலம் பொது, – நிலா பொது, – கதிர் பொது, கதிரவன் பொது, – நீரும் பொது, -நெருப்பும் பொது, இவற்றை உள்ளடக்கிக் கொண்டாடப்படும் பொங்கலும் பொது!
எவ்வகையான புராணச் சார்புமில்லாத மூடத்தனமற்ற விழா பொங்கல் விழா! போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் நிகழ்வாகப் பொங்கல் திருவிழாக்கோலம் பூணுகிறது. விவசாயம் நடக்க முதல் காரணமாக இருப்பது சூரிய ஒளியே! எனவேதான் சூரியனுக்கு படையல் வைப்பதாக சூரியப் பொங்கல். உழவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப்பொங்கல், விவசாயத்தை செம்மையாக செய்யும் உழவர்களுக்கு உழவர் பொங்கல் என வரிசையாகக் கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.
செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை, என்பதற்கேற்ப, உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.
வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும்!
வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும்!
மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும்!
மண்மணக்கும் சர்க்கரையாய் பொங்கல் இனிக்கும்!
பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத் திருநாள்!
மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த நன்னாள்!
வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த ஒருநாள்!
தை பிறந்தால் வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாள்!
தமிழனும் உழவனும் தரணியில் வாழ்வாங்கு வாழ
ஒற்றுமையாய் சொல்லிடுவோம்
பொங்கலோ பொங்கல்!
– அருள்முனைவர் கு.அமல் சே.ச. திருச்சி தூ’ய வளனார் தன்னாட்சிக் கல்லூரி செயலர்