லாபம் கொழிக்கும் ஏற்றுமதி!
இந்தியாவின் ஏற்றுமதியில் 45% பங்களிப்பு எஸ்.எம்.இ.கள் மூலமே கிடைக்கிறது. நாட்டின் ஏற்றுமதியில் பெரும்பான்மை சதவிகிதத்தை எஸ்.எம்.இ.கள் கொண்டுள்ளதால் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்றுமதியில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதாலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு நல்லவரவேற்பு உள்ளதாலும் எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவது அவசியம்.
எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு முதலில் அரசாங்கத்திடம் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகத்தில் (Export Promotion Council) தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து ஏற்றுமதி, இறக்குமதிக்கான குறியீட்டை பெறவேண்டும்.
மேலும், ஃபியோ போன்ற அமைப்புகள் ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புவுணர்வு கூட்டங்களை நடத்துகிறது. அதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம்.
ஏற்றுமதி செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் தரத்தில் இருக்க வேண்டும். காரணம், நீங்கள் தயாரிக்கும் பொருளில் சிறுகுறை ஏற்பட்டாலும் உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் தந்த நிறுவனம் அந்தப் பொருளை வாங்காமல் போவதற்கு வாய்ப்புண்டு.
நீங்கள் வாங்கும் மூலப்பொருட்கள் தரமானதா, உங்கள் தயாரிப்புமுறையில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதில் தொடங்கி, பொருட்கள் கெட்டுப் போகாத வகையில் பேக்கேஜ் செய்யப்படுகிறதா என்பது வரை அனைத்தையுமே கவனிக்க வேண்டும். ஏற்றுமதி ஆர்டர் தரும் வெளிநாட்டு நிறுவனங்கள் நமது எஸ்.எம்.இ.களிடம் சிலவிஷயங்களில் அதிருப்தி அடைகின்றன.
உதாரணமாக, ‘எங்களால் அதிக பொருளை தயாரித்துத்தர முடியும்’ என்று கூறிவிட்டு, அந்த அளவு பொருளை தயாரித்துத் தரமுடியாத நிலை ஏற்படும் போது, ஆர்டர் தந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. அல்லது சரியான தரத்தில் பொருளைத் தயார் செய்து தரமுடியாத நிலை ஏற்படும் போதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன.
ஆரம்பத்தில் நல்ல தரத்தில் பொருட்களைத் தயார் செய்து தந்துவிட்டு பின்னர் அந்தத் தரத்தை தொடர முடியாத போதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன.
வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, இந்தக் குறைகள் சிறிதும் இல்லாமல் இருப்பது தொடர்ந்து ஆர்டர்களை பெற உதவும்.
ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
1. எந்தநாட்டுக்குஏற்றுமதிசெய்யப்போகிறீர்களோ, அந்த நாட்டின் மார்க்கெட்டை நன்கு ஆராய வேண்டும்.அங்கு என்னென்ன பொருட்கள் அதிகம் விற்கும், எவ்வளவு விற்கும் என்பது போன்ற தகவல்களை அறிந்து கொள்வதுஅவசியம்.
2. மூலப்பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவது அவசியம். அப்போதுதான் அவர்களால் ஒரேமாதிரியான தரத்தில் பொருட்களை தயாரிக்க முடியும்; சரியான நேரத்தில் டெலிவரி தரவும் முடியும்.
3. பொருட்களை தொலைதூரத்துக்கு அனுப்புவதால் பேக்கேஜிங்கில் நல்ல தொழில் நுட்பத்தையும், அதற்கேற்றவாறு பாதுகாப்பான பேக்கிங் முறைகளையும் பின்பற்றுவது அவசியம். ஏற்றுமதியாகும் பொருட்கள் தட்பவெட்பநிலையால் பாதிப்படையாதபடி பேக்கிங் செய்வது அவசியம்.
4. வெளிநாட்டுக்கு நீங்கள் அனுப்பும் பொருளை இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம். அப்போதுதான், அனுப்பப்படும் பொருள் இடையில் சேதமானாலோ அல்லது திடீர் போர் காரணமாக பாதிப்படைந்தாலோ அதற்கான இழப்பீட்டை பெறமுடியும்.
5. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பலவிதமான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. இது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்தப்பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என அந்த நாடு சான்றிதழ் அளிக்கும். ஏற்றுமதி செய்வதற்கு இந்தச் சான்றிதழ் பெறுவதுஅவசியம்.
இவை தவிர, இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் திட்டங்களை உருவாக்கியுள்ளது.
இதன் முக்கிய நோக்கமே, இந்திய தயாரிப்புகளை மற்ற நாடுகளில் பிரபலப்படுத்துவதுதான். மேலும், உலகின் பல நாடுகளில் எங்கெங்கு, என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றன, அதனை யார், யார் தயாரிக்கிறார்கள் என்கிற தகவல்களை எஸ்.எம்.இ.களுக்கு எடுத்துச்சொல்கிறது.