சூப்பர் வருமானம் தரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழில்!
கிராமத்தினர் முதல் நகரத்தினர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் சுத்திகரிக் கப்பட்ட குடிநீருக்கான தேவை அத்தியாவசியமாக மாறியிருப்பதால், இந்தத் தொழிலுக்கான வரவேற்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளுடன், வீடுகளுக்கு 20 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீரை நிரப்பி விற்பனை செய்யும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை!
‘‘மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளில் குடிநீர் இன்றியமையாதது. பொதுவாக, பி.ஹெச் 7 அளவில் இருப்பதுதான் குடிக்க ஏதுவான நல்ல நீர். அந்த அளவுக்குக் கீழே சென்றால் நீரானது காரத்தன்மையுடனும், மேலே சென்றால் அமிலத்தன்மையுடனும் இருக்கும். நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீரின் தன்மை மிகவும் பாதிக்கப்படுகிறது. குடிக்க உகந்ததாக இல்லாத இதுபோன்ற நீரில் பி.ஹெச் 7-க்குக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும்.
உலகில் தோன்றிய பெரும்பாலான நோய்களும் நீரின் வழியேதான் பரவியிருக் கின்றன. கெட்ட பாக்டீரியாக்கள் ஊடுருவி இருக்கும் நீரை நேரடியாக அப்படியே குடிப்ப தால்தான், பல்வேறு உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. இதனால், குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடிப்பது மட்டுமே சிறந்த வழிமுறை. எனவேதான், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை ஆண்டு முழுக்க எல்லா நாளும் நமக்கு அவசியமாகிறது.
எந்த இடம் பொருத்தமானது?
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடத் தேர்வுதான் மிகவும் முக்கியமானது. அரசின் வழிகாட்டுதல்படி, நிலத்தடி நீர் மட்டம் அதிக அளவில் இருக்கும் பகுதிதான் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உகந்த இடம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், இந்த இடத்தை சாஃப்ட் (safe zone) என வகைப்படுத்தியுள்ளது.
அதேபோல, நிலத்தடி நீர் மட்டம் ஓரளவுக்குக் குறைவாக இருப்பது செமி கிரிட்டிகல் (semi critical) பகுதி, மிகவும் குறைவாக இருப்பது கிரிட்டிகல் (critical) பகுதி, மிக மிகக் குறைவாக இருப்பது ஓவர்டிரான் (over drawn) எனக் குறிப்பிடப்படுகிறது. சாஃப்ட் தவிர, மற்ற பகுதிகள் தொழிற்சாலை தொடங்க உகந்த இடங்கள் கிடையாது. இந்த இடங்களை (Ground water development percentages) இணைய தளத்திலேயே தெரிந்துகொள்ள முடியும்.
விவசாய நிலம், குடியிருப்புப் பகுதி, நீர் சேகரிப்புப் பகுதி, நீர் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை ஆகிய இடங் களுக்கு அருகில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கக் கூடாது. தேர்வு செய்யப்பட்ட நிலத்திலிருந்து சோதனைக்காகத் தண்ணீர் எடுத்து பரிசோதனை செய்து பார்க்கும்போது, அதில் ரசாயனத்தன்மை இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
சுத்திகரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் இடம் குறைந்தபட்சம் இரண்டரை ஏக்கரில் இருக்க வேண்டும். அதில், கட்டடங்கள் அமைக்க 2,000 சதுரஅடி நிலம் போதுமானது. மற்ற பகுதி திறந்தவெளி நிலமாகவும் இருக்கலாம். சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்திலும் தொழிற்சாலை அமைக்கலாம். போக்குவரத்து வசதிக்காகத் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தில் எட்டு மீட்டர் சாலை இருப்பதும் முக்கியம். ஏற்கெனவே, சுத்திகரிப்பு நிலையம் இருக்கும் இடங்களிலும் புதிதாகத் தொழில் தொடங்கக் கூடாது.
எங்கெல்லாம் அனுமதி பெற வேண்டும்?
தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிலும், குடிநீர் வடிகால் வாரியத்திடமும் அனுமதி பெற வேண்டும். தொழிற் சாலை ஆரம்பிக்கும் முன்பாகவே இந்த மூன்று அனுமதியையும் பெற்றுவிட்டால், தொழிற்சாலைக் கான கட்டட அனுமதி மற்றும் மின்சார இணைப்புக்கான அனுமதியும் எளிதாகக் கிடைத்து விடும்.
பரிசோதனைக்கூடம், ஐ.எஸ்.ஐ சான்றிதழ் அவசியம்…
தொழிற்சாலை வளாகத்தில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீரின் தன்மை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதற்காகத் தொழிற்சாலையிலேயே ஒரு பரிசோதனைக் கூடம் இருக்க வேண்டும். அதில், துறை சார்ந்த அனுபவம் கொண்ட பணியாளர் களையும் நியமிக்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட நீரை கேன்களில் நிரப்பும் முன்பு (ஒவ்வொரு பேட்ஜ்), உரிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசின் வழிகாட்டுதல்படி, நாம் உற்பத்தி செய்யும் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். இந்தச் சான்றிதழைப் புதுப்பிக்க ஆண்டுக்கு ஒருமுறை ரூ.1.5 லட்சம் செலவாகும்.
முதலீடு எவ்வளவு தேவை..?
கேன்களில் தண்ணீர் விநியோகம் செய்யும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏறக்குறைய ரூ.60 லட்சம் முதலீடு தேவைப்படும். 1, 2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதற்கான தொழிற்சாலையை அமைக்க ரூ.1 கோடி வரை முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருள்கள் என்னென்ன?
நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரங்கள், பரிசோதனைக் கருவிகள் உட்பட அவசியமான பல்வேறு உபகரணங்கள் தேவைப்படும். தண்ணீர் கேன்களை மூடுவதற்கான மூடிகளை, அதை உற்பத்தி செய்வோரிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். தவிர, தண்ணீர், குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான ரசாயனங்கள் (படிகாரம், கார்பன் வடிகட்டி (Activation carbon filteration) உள்ளிட்ட சில) ஆகியவை தேவை.
உற்பத்தி செய்வது எப்படி?
மெஷின் சப்ளையர்களிடமே இந்தத் தொழில் தொடங்கு வதற்கான அடிப்படைத் தகவல்களையும் பயிற்சியையும் பெறலாம். இந்தத் தொழிலிலுள்ள சிலரைச் சந்தித்தும் ஆலோசனைகள் பெறலாம். ஒரு மணி நேரத்துக்கு 4,000 லிட்டர் வீதம், பத்து மணி நேரத்துக்கு 40,000 லிட்டர் அளவுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். தேவையைப் பொறுத்துக் கூடுதலான நேரம் ஆலையை இயக்கலாம். நிலத்தடி நீர் மட்டம் அதிகமுள்ள இடமாக இருந்தால், நீர் தட்டுப்பாடு ஏற்படாது. வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் காலியான கேன்களைச் சரியான முறையில் சுத்திகரித்து, அவற்றில் தண்ணீர் நிரப்பித் தர வேண்டியது மிக அவசியம்.
கடனுதவி கிடைக்குமா?
அடமானம் வைக்க சொத்து இல்லாதபட்சத்தில் பெண் தொழில்முனைவோர் மற்றும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். அதில், இயந்திரங்கள் பெறுவதற்கான தொகையில் 25% மானியம் கிடைக்கும். ‘NEEDS’ திட்டத்தில் எல்லாத் தரப்பினரும் பயன் பெறலாம். அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற்று, அதில், 25% மானியம் பெறலாம். மீதித் தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம்.
விற்பனைக்கான வாய்ப்புகள்…
எல்லாச் செலவினங்களையும் சேர்த்துச் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் நீரை உற்பத்தி செய்ய 3 ரூபாய்தான் செலவாகும். ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் லாபம் ஈட்டலாம். இந்தத் தொழிலில் அதிகம் பிசினஸ் செய்ய சரியான டீலர்களைப் பிடிப்பது முக்கியம். சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் நீர் நிரப்பப்பட்ட கேன் ஒன்றை டீலருக்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அதை வாகனத்தில் கொண்டுச் சென்று, மளிகைக் கடைக்காரர் அல்லது லோக்கல் தண்ணீர் கேன் சப்ளையரிடம் (சப் டீலர்), கேனுக்கு 20 ரூபாய் விலையில் விற்பனை செய்வார் அந்த டீலர். ஒரு கேன் 25 – 30 ரூபாய் விலையில்,
சப் டீலர் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வார்
மக்களிடம் நேரடி விற்பனை செய்யும் வாய்ப்பு நமக்கு அமைந்தால், கூடுதல் வருமானம் ஈட்டலாம். 25 தினங்களில் 40,000 – 50,000 லிட்டர்நீரை விற்பனை செய்வதன் மூலம் மாதத்துக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம்.