திருச்சி, பெரிய கடைவீதியில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வயலூரான் மருந்து கடை திறக்கும் முன்பே நூற்றுக்கும் மேற்பட்டோர் வாசலில் மருந்து வாங்கக் காத்திருக்கிறார்கள்…
தமிழ்ச் சமூகத்தின் பண்டைய சித்தர்களால் உருவாக்கித் தந்த மருத்துவ முறைகளில் ஒன்று சித்த மருத்துவம். மனித உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்கள், தாதுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பஸ்பம், தைலம், கஷாயங்கள் மூலம் நோயினை குணப்படுத்திடும் ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவ முறையை பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்றும் கூறுவார்கள்.
அலோபதி மருத்துவத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தி நோய்களை உடனடியாக குணப்படுத்தும் முறையில் மனிதன் அடிமையானதால் சித்த மருத்துவ முறைகளை தமிழர்கள் மறந்தனர். பிளேக், மலேரியா போன்று கொசுக்களால் உண்டாகும் நோய்களை தடுக்க அலோபதி மருத்துவமானது புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து வந்தது. அதையே நாமும் பின்பற்றி வந்தோம். ஆனால் நமது உடலை ஆட்படுத்தும் நோய்களுக்கு நமது உணவு முறைகளிலேயே மருந்துகள் உண்டு என்பதை மறந்திருந்தோம்.
டெங்கு காய்ச்சலுக்கு தீர்வாக அலோபதியில் எந்த ஒரு ஆன்ட்டிபயாடிக்கும் இல்லாதிருந்த போது நிலவேம்பு கசாயம் டெங்குவை எளிதாக குணப்படுத்தியது. அன்று முதல் மக்களின் பார்வை சித்த மருத்துவம் பக்கம் திரும்பியது. ஒரு பேரிழப்பு பெரும் மாற்றத்திற்கு வகை செய்யும் என்று கூறுவார்கள். அது போல் தற்போது கரோனா நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த போது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உயிரிழப்பு பெருமளவும் குறையக் காரணமாக இருந்தது சித்த மருத்துவமாகும்.
“தமிழகத்தை தாண்டி பிற மாநிலத்திலிருந்தும் கபசுர சூரணம் கேட்டு வரத் தொடங்கினார்கள். தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் என் கடை வாசலில் காலை முதலே குவிந்தனர்” என பெருமிதத்துடன் கூறுகிறார் வயலூரான் மருந்து கடை உரிமையாளர் காசி விஸ்வநாதன்.
வயலூரான் மருந்து கடை, திருச்சி, பெரிய கடைவீதியில் சுமார் 90 ஆண்டுகள் பழைமையான பாரம்பரிய மருந்து கடையாகும். சடையன் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டு அவரது மகன் சந்தானம் செட்டியாரால் தொடர்ந்து நடத்தப்பட்டு தற்போது மூன்றாவது தலைமுறையாக காசி விஸ்வநாதன் இந்த சித்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார்.
”நான் எட்டாவது முடித்தவுடனே கடைக்கு வந்துவிட்டேன். நான் வந்த போது பெருமளவு மருத்துவம் அலோபதியில் நடைபெற்றதால் சித்த மருந்துகளை வாங்குவோர் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருந்தது. டெங்கு, கரோனாவிற்கு பின்பு தமிழ் மருந்துப் பொருட்கள், பிரசவ லேகியம், குழந்தையின்மையை சரி செய்யும் லேகியம், கசாய மருந்து பொருட்களை மக்கள் பெருமளவில் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
”பெரிய கடை வீதியில் வரிசையாக நகைக் கடைகள் இருப்பது போல் அப்போது சித்த மருந்து கடைகள் இருந்தது. மக்கள் அலோபதிக்கு மாறியதால் சித்த மருந்து விற்பனை குறைந்து பலரும் கடைகளை மூடிவிட்டனர்” என என் தந்தை என்னிடம் கூறுவார்.
வெகு சில கடைகளே இருக்கும் இக்காலத்தில் சித்த மருந்துகளை மக்கள் நாடத் தொடங்கியதும் அலோபதி மருந்து கடைகளிலும் சித்த மருந்துகளை விற்கத் தொடங்கிவிட்டனர். சித்த மருத்துவ கடைகளில் ஆங்கில மருந்துகள் விற்க முடியாது.
விதிகள் அப்படி. ஆனால் அலோபதி கடைகளில் சித்த மருந்துகளை விற்க அரசு எந்தவித விதிமுறைகளையும் வகுக்கவில்லை. இதனால் இருக்கின்ற ஒரு சில சித்த மருந்து கடைகளும் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது” என்றார் வருத்தத்துடன்.
மேலும் அவர் நம்மிடம், ”தற்போது புறநகர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளிலும் சித்த மருந்து பொருட்களான திரிபலா, சூரண பொடி, கருசீரகம், தூதுவளை, நிலவேம்பு கசாயம், கபசுர சூரணம் விற்கத் தொடங்கி விட்டனர். மக்களும் அங்கே அவற்றை வாங்குகிறார்கள். மக்கள் சித்த மருத்துவத்தை நாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சி தான் என்றாலும் எங்களை போல் எந்த நோய்க்கு எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும் என சொல்லி விற்பனை செய்ய மளிகை கடைகாரர்களுக்குத் தெரியாது என்பதால் பயன்படுத்துவோர் வேறு உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக கரோனா நோய்க்கு பயந்து பலரும் தினமும் காலை, மாலையும் டீ குடிப்பது போல் கபசுர குடிநீரை குடித்தார்கள். இதனால் பலருக்கும் வயிற்றுப் புண் ஏற்பட்டது. இதை பலரும் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பார்கள். அதனால் தான் சித்த மருந்து பொருட்களை எங்கே வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்த முடியாது. அவற்றிற்கும் ஒரு வரையறை உண்டு என்பதை உணர வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் என் தாய் மாமாவின் மகள் (இவர் ஏற்கனவே சித்த மருத்துவ படிப்பையும் முடித்துள்ளார்) கேட்டார் என்பதற்காக நிலவேம்பு கசாயம், கபசுர சூரணத்தை அனுப்பி வைத்தோம். ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் கபசுர சூரணத்தை அனுமதிக்கவில்லை. காரணம் அந்த மருந்தில் சேர்க்கப்பட்ட பொருட்கள் குறித்து புரிதல் இல்லாததால் பயத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்” என்றார்.
காசி விஸ்வநாதனின் மகன் பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். ”கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும் சித்த மருந்து கடை வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்வேன்” என்றார் உறுதியுடன். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசானது ஆயுர்வேதாவிற்கு 3 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
ஆனால் சித்த மருத்துவத்திற்கு வெறும் 437 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தற்போது கரோனா தொற்று அரசின் இந்த மனப்பான்மையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கரோனாவை வைத்து வியாபாரம் செய்ய நினைத்தவர்கள் கூட சித்தா இத்தனை மிகுந்த எழுச்சி பெறும் என நினைக்கவில்லை.!
சித்த மருந்து வர்த்தகத்தின் மீதான பார்வை தற்போது அதிகரித்துள்ளது. சாமானியனுக்கு கை வைத்தியமாக இருக்கும் சித்தா, வர்த்தக யுத்தத்தில் கைக் கெட்டா தூரத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி..!