பணம் சேர்க்க எளியவழி..
பணம் சேர்க்க எளியவழி..
பொதுவாக, ஜென் தத்துவம் நம் நாட்டிலிருந்து புத்த மதத்தின் வாயிலாக சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இன்று உலகம் முழுவதும் வாழ்வியல் நிலை பெயர் பெற்றது. எளிமை, தெளிவு, சுய விழிப்புணர்வு மற்றும் சமநிலையைக் கொண்டிருப்பது ஆகியவை ஜென் தத்துவத்தின் அடிப்படை நிலையாகும். ஜென் தத்துவத்தை முதலீட்டுச் சிந்தனையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் தான் இவை..
தொடர் முதலீடு அவசியம் :
‘ஜென்’ சிந்தனையின் அடிப்படையே எந்தப் பற்றும் இன்றி தினமும் சில நிமிடங்களுக்கு ஏதாவது, ஒரு வேலையைத் தொடர்ச்சியாகச் செய்வது. அந்த வேலை எதுவேண்டுமானாலும் இருக்கலாம். இந்த அடிப்படைத் தத்துவத்தின்படி, நீங்கள் முதலீடு செய்யும் தொகை சிறிதாக இருந்தாலும், நீண்ட காலத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே அதிக பலனைத் தரும்.
கடனைக் குறையுங்கள்…
கிடைத்ததை ருசித்தும் ரசித்தும் உண்ண பழகுங்கள்; உணவு உண்மையிலே உடல் பலத்தை மெருகேற்றும். அதுபோல, கடனைக் குறைப்பதும், வரவுக்குள் செலவைக் கொண்டிருப்பதும் நம்மை எதிர்வரும் நிதிச் சிக்கலில் இருந்து பாதுகாக்கும். தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிக் காமல், உண்மையான தேவையை உணர்ந்து அது சார்ந்து நிதி ஆதாரத்தை ஏற்படுத்தலாம்.
சரியான, உறுதியான நிதி இலக்குகள்
உங்கள் மனதுக்குப் பிடித்ததை அல்லது நீங்கள் அடையப்போகும் இலக்குக்கான செயலுக்குத் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் செலவழியுங்கள்; உறுதியான மற்றும் சரியான இலக்குகள் வெற்றியடைய நிதித் திட்டமிடல் அவசியம். உங்கள் இலக்குக்கான தொகை மற்றும் காலத்தை நிர்ணயித்து அதன்படி செயல்படுங்கள். பின்பு, அதற்குத் தகுந்த முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். சரியான முதலீட்டுத் திட்டங்களை அறிவதில் சிரமம் இருந்தால், ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகுங்கள்.
நீண்ட கால முதலீடு
இடையில் தடைகள் அல்லது பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், கவலை வேண்டாம்; அதை நன்கு சிந்தித்து தீர்வு காணுங்கள். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் நிரந்தமில்லை. முதலீட்டிலும் இதே அணுகு முறையை மேற்கொள்ளுங்கள். நீண்ட காலத்தில் முதலீட்டை மேற்கொள்ளும்போது, குறுகிய காலத்தில் நிகழ்ந்த தவற்றை அவ்வப்போது திருத்திக் கொள்ளலாம். பணப்பெருக்கமும் அடைய லாம். பொருளாதார சுழற்சி யால் ஏற்படும் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம்.
ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும்
ஒரே ஒரு வேலையைத் தெளிவான சிந்தனையுடன் 20&30 நிமிடங்கள் வரை செய்யுங்கள். நீங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா? அதை மட்டும் செய்யுங்கள்; தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே செய்ய வேண்டாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமா? பங்குச் சந்தையை மட்டும் கற்றுக்கொண்டு முதலீடு செய்யுங்கள். தங்கம், ரியல் எஸ்டேட் பற்றிய கவலை இப்போது வேண்டாம். அதைப் பிறகு பார்த்துக்கொள்ள லாம். இந்தப் பயிற்சி உங்கள் மனதைப் பக்குவப்படுத்துவதுடன் உங்களை பலசாலி ஆக்கும்.
உங்களை நீங்களே எப்போதும் பாராட்டிக் கொள்ளுங்கள்
இந்த இயற்கையும் அதைச் சார்ந்த உயிரும் நமக்கு எத்தகைய வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சிந்தியுங்கள். முடிந்தவரை எதற்கும் பாதிப்பின்றி வாழ (உணவுச் சங்கிலியைத் தவிர்த்து) முயற்சி செய்யுங்கள். செய்யும் வேலையைப் பொறுமை யாகச் செய்தல் மற்றும் எடுத்துக்கொண்ட செயலை முழுவதும் முடிக்கப் பழகுங்கள்.
முதலீட்டு திறன்கள்
உங்கள் முதலீட்டுத் திறனைப் பற்றி வருத்தப் பட வேண்டாம். உங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம். பொறுமையாக உங்களுக்கு தெரிந்த, கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். சிறுதுளி பெருவெள்ளம் போல நீண்ட காலத்தில் செல்வ வளம் பெருகும். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோ சிறப்பானதாக மாறும்.
தேவையற்ற விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கென ஓர் இலக்கை நிர்ணயுங்கள் – ஒரு வாரமாக, ஒரு வருடமாக, வாழ்நாள் முழுவதுமாக இருக்கலாம். தெரிந்ததைத் தேர்ந்தெடுங்கள். பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு மோசடித் திட்டத்தில் பணத்தைப் போட்டு சம்பாதிக்கிறார் என நீங்களும் அவரைப்போல அணுக வேண்டாம்.