முதலீடின்றி தொடங்க சில பிசினஸ் ஐடியாக்கள்..!
வேலைக்கு செல்வது என்பது சிலருக்கு ஒவ்வாமையான விஷய மாகும். ஆனால் என்ன செய்வது, “தனியாக தொழில் தொடங்க வேண்டு மென்றால் என்னிடம் முதலீடு இல்லையே” என கவலைப்படும் நபரா நீங்கள். உங்களுக்கான சில முதலீடு இல்லா தொழில் திட்டங்களை இங்கே உங்களுக்கு நாங்கள் தருகிறோம்.
ரியல் எஸ்டேட் வியாபாரம் :
நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்பினால் அதிகபட்சமாக ஒரு ஆன்ட்ராய்டு செல்போன் (வாட்ஸ்-அப்பில் லே-அவுட் உள்ளிட்ட பல்வேறு படங்களை அனுப்பிட உதவும்) கையில் இருந்தால் போதும். ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனங்களில், எந்த இடம், மனை விலை உள்ளிட்ட தேவையான அனைத்து விபரங்களையும் பெற்றுக் கொண்டு, உங்கள் நட்பு வட்டத்தின் மூலம் இத்தொழிலை தொடங்கலாம். மற்றவர்களிடம் நீங்கள் எப்படி பேச வேண்டும் என்பதை அந்நிறுவனமே உங்களுக்கு கற்றுத் தந்துவிடும்.
நீங்கள் விற்கும் மனைக்கேற்ப உங்களுக்கு கணிசமான கமிஷனை அந்நிறுவனம் உங்களுக்கு வழங்கிவிடும். நீங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருந்தால், உங்களுக்கென்றே தனியாக இடங்களை கொடுத்து விற்கச் சொல்லும் நிறுவனங்களும் உள்ளது. எனவே மனை விற்பனை செய்யும் சாமார்த்தியம் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்.
வேலை வாங்கித் தருதல் :
நாம் வேலைக்கு போகத் தயாராக இல்லை. ஆனால் எங்கெல்லாம் வேலை தருகிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நீங்கள் சேகரித்துக் கொண்டால் போதும். புதிதாக தொழில் தொடங்கும் பெரு நிறுவனங்கள் வேலைக்கான ஆட்களை தேடிக் கொண்டிருக்காமல், தனியார் வேலைவாய்ப்பு அலுவலகங்களையே நாடுகிறார்கள். அத்துடன் அரசானது பெரும்பாலும் அவுட்சோர்ஸிங் முறையில் தான் தற்போது வேலைகளை செய்து வருகிறது. எனவே வேலை தருவோர்.
வேலை தேடுவோர் என இருவரை பற்றிய புள்ளி விபரங்களையும் நீங்கள் கைவசம் வைத்திருந்தால் மேற்கூறிய இடங்களில் இருவரையும் இணைக்கும் பாலமாக செயல்படலாம். அது உங்களுக்கு கணிசமான வருமானத்தை பெற்றுத் தரும்.
பொருட்களை வாங்கி அனுப்பும் தொழில் :
இது கொஞ்சம் புதிய முயற்சியாக இருக்கும். வருமானம் பார்க்க கொஞ்ச காலம் பிடிக்கும். ஆனால் உங்களுக்கான தொடர்புகள் அதிகமாக இருந்தால் விரைவிலேயே ஒரு கணிசமான வருமானத்தை பெறலாம்.
திருச்சி மாவட்டத்தில், புறநகரில் வாழ்பவர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தின் அருகாமை மாவட்டத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் திருச்சியில் கிடைக்கிறது என்றால் அவர்கள் அந்த பொருளை வாங்க திருச்சிக்கு வந்த செல்ல நேரிடும். இதற்கு ஒரு நாள் செலவு பிடிப்பதுடன், அவர்கள் அங்கே செய்யும் வேலையும் தடைபடும். இதற்கான தீர்வு தான் உங்களுக்கான வருமானம்.
(உதாரணம்) மணப்பாறையில் உள்ள ஒருவரின் கார் அல்லது பைக்கிற்கான உதிரிபாகம் ஒன்று தேவைப்படுகிறது. அது திருச்சியில் தான் கிடைக்கிறது என்றால் அதை வாங்க அவர் திருச்சி வர வேண்டும். ஆனால் அவரால் திருச்சிக்கு வந்து செல்ல முடியவில்லை. இதனால் அவரின் தினசரி போக்குவரத்து வாகனமான கார்/பைக் மெக்கானிக் பட்டறையிலேயே நின்று கொண்டிருக்கிறது. தினசரி போக்குவரத்து தடைபடுகிறது. இப்படியான நபர்கள் தான் உங்களுக்கு வருமானம் தருபவர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது, அவருக்கான உதிரிபாகத்தை, திருச்சியில் எந்த ஆட்டோமொபைல் கடையில் கிடைக்கிறதோ, அங்கு சென்று அதை வாங்கி, உரிய ரசீதுடன், மணப்பாறை செல்லும் தனியார் அல்லது அரசு பேருந்தில் கொடுத்துவிட்டால் போதும். இதற்கென ஒரு சிறிய தொகையை நீங்கள் சேவைக் கட்டணமாக பெறலாம்.
பொருளிற்கான பணம், அனுப் பியதற்கான பேருந்து கட்டணம் என அனைத்தையும் பொருள் அனுப்பும் முன்போ, பொருள் அனுப்பிய பின்போ பெறுவதென்பது நீங்கள் வாடிக்கையாளரிடம் பெறும் நம்பிக்கையை பொறுத்தது. ஒவ்வொரு பகுதியிலும் உங்க ளுக்கென பொருள் பட்டுவாடா ஏஜெண்ட் நியமித்துக் கொண்டால், அவர் மூலமும் பொருளை டெலிவரி செய்து பணத்தை வசூலித்து உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு செய்யலாம்.
இன்சூரன்ஸ் ஏஜெண்ட் :
இது ஒரு அரதப் பலசான தொழில். இது எங்களுக்கு தெரியாதா என கேட்கத் தோன்று கிறதா.? இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி. முகவரை கண்டால் பலரும் பிடரி தெறிக்க ஓடுவார்கள். காரணம் அவர் பாலிசி கட்டச் சொல்லி நச்சரிப்பார் என்று.ஆனால் அவர்கள் சத்தமில்லாமல் முகவர் தொழில் செய்து கார், சொந்த வீடு, நிரந்தர வருமானத்துடன் கிட்டத்தட்ட ஒரு மத்திய அரசின் ஊழியர் போல் வருமானம் பெற்றுக் கொண்டிருப்பார்.
எனவே முகவர் பணி என்பது பொறுமையான, அதே வேலையில் நல்ல வருமானம் தரும் வேலையாகும். “வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்” என்றால் அது காப்பீட்டு முகவருக்கு பொருந்தும். விபத்தும், மரணமும் பெருகி வருகிறது. இதனால் காப்பீட்டின் தேவையும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகின்றன. இப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பெருகிவிட்டன. எனவே ஏதாவது ஒரு வங்கியின் முகவராக பணியாற்றினால் முதலீடு இன்றி வருமானம் பெறலாம்.
பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் :
தலைப்பை பார்த்தவுடன் இது பெரிய தொழில். இதற்கு வாகனம் தேவை என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்களை தொடர்பு கொள்ள ஒரு ஆண்ட்ராய்டு போன். உங்களை பற்றி அறிய ஒரு துண்டு பிரசுரம் போதும்.
வீடு காலி செய்பவர்களுக்கு உதவ தேவையான வேலையாட்கள் (அவர்கள் நம்பிக்கையான ஆட்களாக இருக்க வேண்டும்), லாரி உரிமையாளர்கள் தொடர்பு இருந்தால் போதும். பொருட்களை இடமாற்றம் செய்து கொடுத்து கணிசமான சேவைக் கட்டணத்தை பெறலாம்.