ரூ.8,000 யிலிருந்து ரூ.2,000 கோடியாக வருமானம் எகிறிய நிறுவனத்தின் வரலாறு!
ரூ.8,000 யிலிருந்து ரூ.2,000 கோடியாக வருமானம் எகிறிய நிறுவனத்தின் வரலாறு!
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புரோகரேஜ் நிறுவனங்களில் ஜிரோதா (zerodha) மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஜிரோதா நிறுவனத்தை நிதின் காமத் தனது சகோதரர் மற்றும் 5 பேருடன் இணைந்து தொடங்கினார். ஒரு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக துவங்கி இன்று மாபெரும் நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கால்சென்டரில் 8 ஆயிரம் ரூபாய்க்கு பணியாற்றி வந்த நிதின் காமத் இந்த ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் சம்பாதித்துள்ளார். பொதுவாக ஸ்டார்ட்அப் என்றாலே ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரியை சேர்ந்தவர்கள் மிகவும் அதிகமாக இருப்பார்கள், ஆனால், நிதின் காமத் ஐஐஎம் கல்லூரியில் இருந்து வந்த ஊழியர்களை நிறுவனத்தில் சேர்க்கக் கூடாது என்ற குறிக்கோளில் உறுதியாக இருந்தார். 2022ம் நிதியாண்டில் நிதின்காமத் தலைமையிலான ஜிரோதா நிறுவனத்தின் மொத்த லாபம் 2,094 கோடி ரூபாயாகவும், நிறுவன வருமானம் 4,964 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையில் அந்தஸ்து
ஒரு காலத்தில் கால் சென்டரில் மாதம் 8 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்த நிதின் காமத் இன்று தினந்தோறும் கோடிகளில் சம்பாதிக்கிறார். இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் துவங்கும் முன்பே மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவானது ஜிரோதா நிறுவனம்.
பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் மத்தியில் மிகவும் வித்தியாசமாக ஸ்மார்ட் போனில் வர்த்தகம் செய்யும் சேவையைக் கொண்டு வந்ததில் இருந்து சாமானிய மக்களும் எளிதாக வர்த்தகம் செய்யும் அளவுக்கு ஜிரோதா தனது தளத்தை மேம்படுத்தியது. மேலும் இந்திய சந்தைக்குச் சாதகமாக இருந்த காரணத்தால் வேகமாக வளர்ந்து யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது.
என்ஆர்ஐயால் திருப்புமுனை
17 வயது முதல் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஜிரோதா தலைவர் நிதின் காமத், 2001 முதல் 2005 வரையிலான காலக்கட்டத்தில் கால் சென்டரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜிம் ஒன்றில் என்ஆர்ஐ-ஐ ஒருவரை சந்தித்தபோது, அவர் நிதின் காமத் பங்குமுதலீட்டு போர்ட்போலியோவை பார்த்தார். இதில் வியந்து போன அந்த என்ஆர்ஐ, தனது கணக்கை நிர்வாகம் செய்ய நிதின் காமத்-க்கு கொடுத்தார்.
அங்கிருந்துதான் அவருடைய பயணம் துவங்கியது. சுமார் 12 புரோகரேஜ் நிறுவனத்தில் பணியாற்றிய நித்தின் காமத், புரோகரேஜ் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்ததை உணர்ந்தார்.
புதிய தளம்
இங்குதான் ஜிரோதா என்ற புதிய தளத்தை உருவாக்குவதற்கு ஐடியா உதயமானது. இந்த நேரத்தில் தேசிய பங்குச்சந்தை இலவசமாக சாப்ட்வேர்-ஐ கொடுத்து வந்தது. இதைப் பயன்படுத்தி நிதின் காமத் தனது சகோதரர் நிகில் காமத், மேலும் 5 பேருடன் இணைந்து ஜிரோதா நிறுவனம் தொடங்கப்பட்டது.
1000 வாடிக்கையாளர்கள்
முதல் வருடத்தில் 1,000 வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜிரோதா நிறுவனம் மாதம் 100 வாடிக்கையாளர் சேர்ந்து வந்த நிலையில் 2011ம் ஆண்டில் மாதம் 400 வாடிக்கையாளர்களைச் சேர்க்க துவங்கியது. 2009ல் ஜிரோதா நிறுவனத்தில் முதலீட்டை திரட்ட நிதின் காமத் முயற்சி செய்தபோது அவருடைய கல்வி, வர்த்தகத் துறையில் முன் அனுபவம் இல்லாத தைக் கண்டு யாரும் முதலீடு அளிக்க வில்லை.
இவர்களை சேர்க்கவில்லை
உலகமே ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரி மாணவர்களை ஈர்த்து வரும் வேளையில் நிதின்காமத் தனது நிறுவனத்தில் ஒரு ஐஐடி, ஐஐஎம் மாணவர்களை சேர்க்கவில்லை. இதற்குக் காரணமாக இந்தக் கல்லூரியில் இருந்து வரும் மாண வர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் தங்களின் சொந்த வளர்ச்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
சாதிக்கும் எண்ணம்
வாழ்வில் முன்னேறி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் உதித்துவிட்டால், குண்டான் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்திவிட்டு, வெற்றி திசையை நோக்கி நமது பயணத்தை மேற்கொண்டாலே ஒவ்வொருவரும் சாதனையாளரே!