கார்ப்ரேட் வர்த்தகமாக உருமாறிய மரத்தடி தொழில்
20ம் நூற்றாண்டு இந்திய திரைப்படங்களில் மரத்தடி நாவிதம் (முடி திருத்தம்) இடம்பெறும் காட்சிகள் ஏராளம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் இந்த மரத்தடி நாவித தொழிலை மையப்படுத்தி நடித்த படங்கள் ஏராளம். நாமும் சிரித்து மகிழ்ந்து கடந்திருப்போம். இந்த மரத்தடி தொழிலில், கடந்த நாற்பது ஆண்டுகளில், கார்ப்ரேட் கைகளில் மெல்ல மாறி இன்றைய இந்திய வர்த்தக மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.
இந்தியாவில் சுமார் 65 லட்சம் சலூன்கள் உள்ளன. இதில் 30 சதவீதம் பதிவு பெற்றவைகள். இத்தொழிலில் தனியுரிமை பெற்று கால் பதித்த 20க்கும் மேற்பட்ட கார்ப்ரேட் நிறுவனங்களிடையே இன்று கடும் தொழில் போட்டி நிலவி வருகிறது. இவர்களின் மொத்த வர்த்தகம் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.2500 கோடி. மேலும் ஆண்டுக்கு 2.3 முதல் 2.8 சதவீத வர்த்தக வளர்ச்சி கண்டு வருகிறது..
இத்தொழிலுக்கான மொத்த வர்த்தகத்தில் 85 விழுக்காடு பெண்கள் பிரிவிலே நடக்கிறது. இந்திய சந்தைகளில், பொதுவாக வியாபார நிகர லாபம் சராசரி 7.7 விழுக்காடு தான். சராசரியைவிட கூடுதல் லாபம் காணும் தொழில் இது. இத்தொழிலில் நிகர வர்த்தக லாபம் 8.2 விழுக்காடாகும். இத்தொழில் சுமார் 70 லட்சம் இளம் தொழில் திறனாளிகளுக்கு வேலை தந்து கொண்டு இருக்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்.
வேலை வாய்ப்பு தேடித்தரும் நக்கூரி இணையதளம், இத்தொழிலில் பணியமர்த்த 40 ஆயிரம் இளம் திறனாளிகளை தேடிக் கொண்டு இருக்கிறது. மூன்று முதல் 25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள 23 ஆயிரம் வேலைகள் இதற்குள் அடங்கும். விண்ணப்பித்தாலே வேலை தான்.
முகச்சவரம் முதல் மேற்கத்திய, புராதான சிகை அலங்காரங்கள் வரை கையாள நவீன சாதனங்கள், வாசனை திரவியங்கள், கெமிக்கல்கள் என விஞ்ஞான யுகத்திற்கு முற்றிலும் மாறிவிட்டது. உலக அளவில் இந்த அழகு தொழிலின் ஆண்டு வர்த்தகம் 532 பில்லியன் அமெரிக்க டாலர். அதில் முடிதிருத்தும் மற்றும் அலங்காரப் பிரிவு வர்த்தகம் மட்டும் சுமார் 230 பில்லியன் டாலர். இந்த நூற்றாண்டில் வர்த்தக அங்கீகாரம் பெற்ற இந்த அரசமரத்தடி தொழில் இனி நகைப்புக்கானது அல்ல. பணம் புரளும் பெரும் வர்த்தகமே!
மன்னை. மனோகரன்