இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு கூலித் தொழிலாளியைப் பணியமர்த்திய, பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின்
(2016) அகில இந்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பெண் தொழில்முனைவோரின் செயல்பாடுகள் குறித்து ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறையின் இணைப் பேராசிரியை டாக்டர் ரூபஸ்ரீ பரல், ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறையின் முனைவர் பட்ட அறிஞரான ஜாஸ்மின் பானுவுடன் இணைந்து கடந்த 2019 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒரு ஆய்வொன்றை நடத்தினர்.
இந்த ஆய்வில், தமிழ்நாட்டின் பெண் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கு, அவர்களின் திறன் மற்றும் அனுபவம், நெட்வொர்க்கிங் வாய்ப்பு, குடும்பத்தின் ஆதரவு மற்றும் நிறுவன ஆதரவு ஆகிய காரணிகள் உதவியுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.
ஆய்வு குறித்துEMERALD INSIGTH என்ற தளத்தில் PEOPLE AND PLACES IN THE GLOBAL ECONOMY என்ற தலைப்பில் ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபஸ்ரீ பரல் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது, “பெண்களின் தொழில்முனைவு என்பது நாட்டின் பொருளாதாரம், புதுமை, வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய படியாகும்.
சமூக-பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோரின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பெண் தொழில் முனைவோர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், எளிதாக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் காரணிகளை ஆராய்வது மிகவும் முக்கியமானது. இத்தகைய ஆய்வுகளின் மூலம், பெண் தொழில்முனைவோரின் நல்வாழ்வை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கும் சமூகத்தில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும் சிறந்த முன்முயற்சிகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வாய்ப்புள்ளது.” என்று விவரித்துள்ளார்.
இந்த ஆய்வின்படி, பெரும்பாலான பெண் தொழில்முனைவோர், ஒரு வணிகத்தை நிர்வகிப்பதன் மூலம் சாதனை உணர்வு, நிதிப் பாதுகாப்பு, தொழில் திருப்தி, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் மற்றவர்களின் நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும் மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளனர். பொதுவாக வருமானமும் லாபமும் குறைவாக இருந்தாலும், தொழிலைத் தொடர்வதில் திருப்தியடைவதாகவும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் பெண் தொழில்முனைவோர் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வில் பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்து வணிகத்தில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் கூறப்பட்டுள்ளதாவது,
•பேரார்வம், புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல், சவால்களுக்கான நாட்டம், சமூக விழுமியங்களை உருவாக்குதல், வேலை-வாழ்க்கை சமநிலைக்கான ஆர்வம், சமூக ஆதரவு (கணவன் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து), நிறுவன ஆதரவு (அரசு உதவி மற்றும் மானியங்கள் போன்றவை).