படிக்கும் பருவத்திலேயே உழைக்கும் சிந்தனை உருவானால் எதையும் செய்யலாம், பயனற்றதாக ஒதுக்கியதை பயன்படுத்தி பயன் பெற்றிருக்கிறார் ஒரு பெண். உழைக்கும் எண்ணமும் புதுமையான சிந்தனையும், அனைத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருந்ததால் ஸ்ரீநிதி உமாநாத் இன்று பிசினஸ் திருச்சியில் செய்தியாகவும் வந்திருக்கிறார்.
திருச்சி, காவேரி கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் படிப்பை தொடங்கினார் ஸ்ரீநிதி உமாநாத். படிக்கும் பருவத்தில் இருந்தே உழைக்கும் எண்ணமும் அதை புதுமையாக படைக்கும் சிந்தனையும் அவரிடம் இருந்தது, சமூக ஊடகமான யூடியூப் மூலம், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதைக் கடந்து பழையவற்றை பயன்படுத்தினால் பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்தார்.
வேஸ்ட் என்று ஒதுக்கும் பொருளை பெஸ்ட்டாக மாற்றினால் அது நமக்கு லாபம் என்று சிந்தித்து, தேவையற்றதாக ஒதுக்கும் பொருட்களை கைவினை பொருட்களாக மாற்றத் தொடங்கினார்.
கல்லூரியின் இறுதி ஆண்டில் 2017இல் மொத்த உற்பத்தியில் வீணாகும் பொருட்களை பெற்றும், துணிதைக்கும் போது வீணாகும் பொருட்களை டைலர்களிடமிருந்து பெற்றும், பல்வேறு தொழில்களில் இருந்து தேவையில்லை என்று ஒதுக்கப்படும் பொருள்களை சிறுக சிறுக பெற்று அதை கை வினையாகவும், அதை பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் மாற்றி வியாபாரம் செய்யத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி, இப்ராகிம் பார்க் எதிரில் உள்ள டைமண்ட் பஜார் பகுதியில் ‘ரிடில்ஸ்’ என்ற பெயரில் சிறிய அளவிலான கடை அமைத்து அதில் வீணாக ஒதுக்கப்பட்ட பொருட்களை விற்று அதைக் கொண்டு தலையணை, காட்டன் பிளவுஸ், ஹேண்ட் பேக் போன்ற பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்து வருகிறார்.
ரூ.40 முதல் ரூ.120 வரையிலான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறார். பலரும் கிப்ட் பொருட்களை வாங்க ரிடில்ஸ்’ பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய செயல்பாட்டிற்கு பல்வேறு மகிலா சங்கங்கள், பல்வேறு அமைப்புகளும் உதவி செய்வதால் அவற்றைக் கொண்டும், தான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பைக் கொண்டும் பல்வேறு இடங்களில் வீணாக ஒதுக்கப்பட்ட பொருட்களை பெற்று அவற்றிற்கு மதிப்புத் தந்து பொருளாதார ரீதியாக மாதம் ரூ.15,000 வரை வருவாய் ஈட்டும் அளவிற்கு சென்றிருக்கிறார்.
மேலும் 15க்கும் மேற்பட்டோரைக் கொண்டு பழைய பொருட்களை பயன்படுத்தி அவற்றை கைவினைப் பொருட்களாகவும், உபயோகிக்கும் பொருட்களாகவும் மாற்றம் செய்ய பெற்று, அவற்றை விற்பனை செய்து வருகிறார்.
இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் செய்யும் பணிகளுக்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கி வருகிறார். இதை இல்லத்தரசிகள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தவாறே பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இப்படி ஸ்ரீநிதியின் தீவிர செயல்பாட்டிற்கு தமிழ்நாடு ஸ்டூடண்ட் அன்வேயில்ட் அசோசியேஷன் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றிருக்கிறார். மேலும் வங்கியில் கடன் பெற்று தன்னுடைய தொழிலில் அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறார் ஸ்ரீநிதி உமாநாத்.