தொழில் முனைவோர்க்கான டிப்ஸ்!
புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளீர்கள். என்ன தொழில் தொடங்கலாம் என்பது உங்களின் சிந்தனையை பொறுத்தது. ஆனால் அனைத்து தொழிலிற்கும் சில அடிப்படை கவனம் முக்கியமானது. பணம் தான் நம்மிடம் நிறைய இருக்கிறது என்றோ நண்பர்கள், வங்கி கடன் தருகிறது என்றோ உடனே கடை திறக்கக் கூடாது. நீங்கள் தொடங்க விரும்பும் தொழில் பற்றிய புரிதல் வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
- நீங்கள் எந்த தொழில் தொடங்க விரும்புகிறீர்களோ அது பற்றிய பயிற்சி, அனுபவம் வேண்டும். நீங்கள் தொழில் சார்ந்த இடங்களில் சிறிது நாட்கள் வேலை செய்து தொழில் குறித்த ஆய்வு நடத்த வேண்டும். நீங்கள் தொடங்கும் இருக்கும் தொழிலில் வளர்ந்தவர்கள் பின்பற்றும் காரணிகள் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
- தொழில் தொடங்கிய உடன் உங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். அதில் தான் உங்களது வெற்றியின் முதல்படி அடங்கியிருக்கிறது.
- நீங்கள் தேர்வு செய்யும் ஊழியரின் அனுபவம் என்ன என்பதை கொண்டு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அதே வேளையில் அது உங்கள் லாபத்திற்கு எந்தளவிற்கு அவர் உதவுகிறார் என்பதன் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது. தேவையான அளவிற்கு மட்டுமே ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும். தேவையற்ற எண்ணிக்கையும் உங்களது தொழில் பாதையை பாதிக்கும்.
- நீங்கள் நியமிக்கும் ஊழியர்களை நம்பியே செயல்பாடுகள் இருக்கக் கூடாது. காரணம் ஊழியர் விடுமுறை எடுத்தாலோ அல்லது வேலையை விட்டு நீங்கினாலோ அந்த வேளையை நீங்கள் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். நீங்களே உரிமையாளர்கள் என்றால் லாப நட்டம் உங்களின் முடிவுகளின் அடிப்படையிலானது. அதே வேளையில் பங்கு நிறுவனம் என்றால் பங்குதாரர் குறித்த முழுமையான அறிவு வேண்டும். லாப, நஷ்ட காலத்தில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிக்க வேண்டும்.
- நீங்கள் எதிர்பார்த்தது போலவோ அல்லது கூடுதலாக லாபம் கிடைக்கும் நிலை இருந்தால் உடனே ஆடம்பர தேவைகளில் கவனம் செலுத்தக் கூடாது. குறிப்பாக கார் வாங்குவது, அடிக்கடி நண்பர்களுடன் சுற்றுலா செல்வது, செய்யும் செலவுகளின் தேவை அறியாது செலவு செய்வது என்பது இருக்கக் கூடாது.
- புதிய தொழிலில் வெற்றி, தோல்வி என்பதில் ஏதாவது ஒன்றை நிச்சயம் சந்திக்க வேண்டும். தோல்வி என்பது அனுபவ பாடமாக கொள்ள வேண்டுமே தவிர அது உங்களின் திறமைக்கு சான்றாக இருக்க முடியாது. எனவே தொடர் முயற்சி வெற்றிக்கான பாதையாக அமையும். 100% கவனமும், அக்கறையும் இருந்தால் தான் வெற்றி நிச்சயம்..!