இனி பட்டா ஒரு நிமிடத்தில்….
பட்டா பிரச்சனைக்கு தீர்வு – தமிழகத்தில் பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஆவதை கருத்தில் கொண்டு இனி ஒரு நிமிடத்தில் பட்டா மாற்றம் தொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
ஒரு நிலத்தையோ அல்லது வீடு போன்ற சொத்துக்களையோ வாங்கும் போது பத்திர பதிவு அலுவலகத்தில் அது குறித்த ஆவணம் பதிவு செய்யப்படும் போதிலும், சம்பந்தப்பட்ட சொத்தின் பட்டா மாறும்போதுதான் அதை வாங்கிவருக்கு முழுமையான உரிமை வந்து சேர்கிறது. ஆகவே பட்டா என்பது தனித்துவம் மிக்கதாகவும், ஒரு சொத்தின் உரிமையை நிலைநாட்டக் கூடியதாகவும் இருக்கிறது.
ஆனால் சொத்து விற்பனை நடவடிக்கையின் போது பட்டா மாறுதல் என்பது பல நடைமுறைகளை கடந்து தான் சாத்தியமாகிறது. அது மட்டும் இன்றி, அதிக காலமும் பிடிக்கிறது. சொத்துக்களை வாங்குபவர்கள் அது தொடர்பான பத்திரப்பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் பட்டாவிற்காக காத்துக் கிடக்கும் நிலைமை இன்றும் நீடிக்கிறது. இது அதிகாரிகள் மட்டத்தில் அதிக அளவில் கையூட்டு நடைபெறுவதற்கும் காரணம் ஆகி விடுகிறது.
பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா கிடைக்கிறது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான எண்ணற்ற புகார்கள் வந்ததை அடுத்து, அது பற்றிய விவரங்களை சேகரித்த முதல்வர் தளபதி அவர்கள், பொதுமக்கள் எளிதாக பட்டா பெறும் வகையில் நடைமுறைகளை கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டிருக்கிறார். அது மட்டுமின்றி தானே முன் என்று அது தொடர்பான சில ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
அதன் அடிப்படையில் தற்போது பொதுமக்கள் மிக எளிதாக பட்டா பெறும் வகையில் மூன்று நடைமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன.
முதல் நடைமுறையாக, ஒரு நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை ஒருவர் எங்கு இருந்தும் எந்த நேரத்திலும் இணைய வழி சேவை மூலம் எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; இந்த இணைய வ சேவை மூலம் பட்டா பெயர் மாற்றத்திற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்
இரண்டாவது நடைமுறையாக, பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கும் விண்ணப்பங்கள் மீது வரிசைப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பட்டா தொடர்பான மனுக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன; ஒன்று நேரடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டிய உட்பிரிவு அல்லாத நேரடி பட்டா ஆகும்.
மற்றொன்று உட்பிரிவு செய்யக்கூடிய பட்டா; அதாவது கூட்டு பட்டா அல்லது ஒரு சர்வே எண்ணில் இருந்து பிரித்து தனியாக ஒரு சொத்துக்கு அதன் உரிமையாளர் பெயரில் தனிப்பட்டா வழங்குவது ஆகும். இந்த தனி பட்டாவிற்கு தனி எண் வழங்கப்படும். அதற்காக உரிய சர்வே செய்யப்பட்டு உட்பிரிவு பட்டா ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த முறையில் உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது 16 நாட்களுக்குள் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உட்பிரிவு செய்யப்பட வேண்டிய பட்டாவிற்கு 30 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த இரண்டு வகை பட்டா மனுக்கள் மீதும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசைப்படி தான் அதற்கான பணிகள் நடைபெறும்; அதிக பணம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பட்டா தொடர்பான மனுக்களை சிறிய காரணங்களை கொண்டு நிராகரிக்க கூடாது; அவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரத்தின் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
மூன்றாவது நடைமுறைதான் பொதுமக்களுக்கு தித்திக்கும் இனிப்பு செய்தியாக அமைந்திருக்கிறது. அதாவது பட்டாவிற்கு விண்ணப்பித்த ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஒரு சொத்தை பத்திர பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
இதற்கு முன்பு உள்ள நடைமுறைப்படி, சொத்து பத்திரப் பதிவு செய்யப்பட்டதும் பட்டா மாற்றம் தொடர்பான மனு பத்திரப்பதிவுத்துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்; அதனை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தலைமை இடத்து துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார்கள்; அதன் பிறகே பட்டா மாற்றம் செய்யப்படும். இதனால் கால விரையம் மட்டும் இன்றி லஞ்சமும் அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் ஒரு நிமிட பட்டா திட்டம் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்ற உடனேயே தானியங்கி முறையில் தானாக பட்டா மாற்றம் செய்யப்படும். அது தொடர்பான மனுக்கள் இனி வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது. அதே நேரம் இந்த திட்டமானது உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றத்திற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சொத்தினை விற்பவர் பெயரில் பட்டா இருந்து அந்த பட்டாவில் உள்ள சொத்தை முழுமையாக அப்படியே வாங்குபவர்களுக்கு உடனே பட்டா வழங்கப்படும்.
இந்த நடைமுறை தொடர்பான பணிகள் 90% முடிவடைந்து இருக்கின்றன. சில இடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் தானியங்கி முறையில் ஒரு நிமிடப்பட்ட வழங்கப்படுகிறது.
பத்திரப்பதிவு முடிந்தவுடன் ஒரு நிமிடத்தில் தானியங்கி மூலம் பட்டா மாற்ற நடைமுறை மாநிலம் முழுவதும் விரைவில் அமலுக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பட்டா பெறுவதில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்கள், அவலங்கள் ஆகியவற்றை முழுமையாக கேட்ட பிறகு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் இதனை கொண்டு வந்திருக்கிறார். இதனால் இனி பொதுமக்கள் பட்டா பெறுவதில் எந்த வலியும் இல்லாமல் எளிதாக அதனை பெற முடியும்; இந்த திட்டத்தின் முழு பலனையும் மக்கள் விரைவில் அனுபவித்து மகிழ்வார்கள் என துறை சார்ந்த அதிகாரிகள் நம்பிக்கையோடு தெரிவித்து இருக்கிறார்கள்.
மக்களின் வலி அறிந்து அதற்கு நிவாரணம் வழங்கும் தளபதியின் செயலாற்றல் போற்றுதற்குரியது.
– இனிகோ இருதயராஜ்
– திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.