கம்மங்கூழும் கருவாட்டு தொக்கும்
ஜங்ஷன் மேம்பால இறக்கத்தில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் கடைக்காரரான கருப்பையா.
பசும்பால் மோர், கொத்தவரை வத்தல், மிளகாய் வத்தல், புளி மிளகாய், பாகற்காய், கருவாடு(அயிரை), சுண்டை வத்தல், இவற்றுடன் கூடிய கம்மங்கூழை விற்று வருகிறார்.
இவர் சொன்ன மருத்துவக்குறிப்பு:
தலையில் உள்ள பொடுகை நீக்க (அதாவது டேன்ட்ரஃப்) சுண்டைக்காயை பறித்து அரைத்து தலைக்கு தடவி பின் குளிக்க அது குணமாகும் என்கிறார்.
மேலும் சுண்டை வத்தலை சமையலில் சேர்க்க வயிற்றுப்புண் சரியாகும் மேலும் எந்த நோயையும் நெருங்க விடாது (கொரோனா உட்பட) என்கிறார். கருவாடு டைபாய்டு சுரத்தை தடுக்கும் என்றும் மருத்துவ ஆலோசனை தருகிறார்.
முன்பெல்லாம் ஆட்சிப்பொருளாக இருந்தது கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை இவைதான். அதாவது பிரதான உணவாக இருந்தது. அரிசி சோறு எப்போதாவது தான் செய்வார்கள் (காட்சிப்பொருளாக இருந்தது அரிசி). (விசேஷ நாட்களில் மட்டும்) கலைஞர் ஆட்சியின் போதுதான் குறைந்த காலத்தில் விளையக்கூடிய புதுநெல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அனைவரும் அரிசி சோறு சாப்பிட உதவினார்.
ஃபார்ஸ்ட் ஃபுட்டில் பச்சையாக உட்கொள்ளப்படும் காய்கறிகள் செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகும். ஆனால் கம்மங்கூழ் எளிதில் சீரணமாகும். அதனால் என்னிடம் வாடிக்கையாக இளைஞர்களும், யுவதிகளும் வந்து கூழ் அருந்துகின்றனர்.
கம்மங்கூழ் 25ரூ, பார்சல் என்றால் ரூ.35. பசுமோர் என்பதால் இந்த விலை. கம்மங்கூழ் உப்புப்போடாமல் வைத்து இருந்தால் 2 நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அதனால் உப்புப்போட்டு கரைத்து வைத்திருக்கும் கூழ் தீர்ந்தவுடன் அல்லது அது கொஞ்சம் மீதி இருக்கும்போது அந்த உப்புப்போடாத கூழையும் சேர்த்து கலந்து பயன்படுத்தினால் ருசி சரியாக இருக்கும்.
அடுத்து ஆட்டுக்கால் சூப், நாட்டுக்கோழி சூப், மழைகாலத்தில் நண்டு சூப், இவைகளை வழங்கி வருகிறேன். மக்களுக்கு செய்யும் பொது சேவையாக நினைத்து தரமான பொருட்களையே வழங்குகிறேன்.
நாட்டுக்கோழி சூப் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அதனை முறையாக சில மருத்துவ மூலிகையுடன் கலந்து தயாரிக்க உடைந்த எலும்புகள் கூட கூடும், உடம்பு வலி தீரும் என்கிறார். அவ்வாறே தான் தயாரிப்பதாகவும் சொல்கிறார். எண்ணெய் சன் ஃபிளவர் ஆயில்தான். ஒருமுறை பயன்படுத்தியை பிறகு பயன்படுத்துவதில்லை என்கிறார் அவர்.
அடுத்து கோவையில் செய்வது போல் சுடச்சுட பிரியாணி ரெடி பண்ணித்தரும் ஐடியா கைவசம் உள்ளதாக கூறும் அவர் விரைவில் அதனை செயலாக்க இருக்கிறார்.
அவர் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.
-நிஷா