குட்டீஸ் மனதில் நீங்கா இடத்தை பிடித்த திருச்சி ஆர்.ஜே. அபிராமி நீலவண்ணன்
திருச்சி ஆல் இந்தியா ரேடியோ ஆர்.ஜே அபிராமி நீலவண்ணன். “மழலையர் நேரம்” ஷோ மூலமாக குட்டீஸ் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தற்போது இளைஞர்களுக்கான “சந்தைபேட்டை” ஷோவை தொகுத்து வழங்கிவருகிறார்.
உங்களது குடும்பம் பற்றி?
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே திருச்சி தான். அப்பா நீலவண்ணன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில வேலை பாக்கறாங்க. அம்மா மட்டுவார்குழலி இல்லத்தரசி. தம்பி பிரணவன் பிஷப் ஹீபர் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கான்.
சிறுவயது கனவு?
சின்ன வயசில எனக்கு மிகப்பெரிய கனவெல்லாம் ஒன்னும் கிடையாது. மைக்கை பாத்தாலே பயந்து ஒடற பொண்ணுதான் நான். ஆனா ஒரு குறிப்பிட்ட வயசு வந்த அப்பறம் மார்கெட்டிங்க்ல போகனும்னு முடிவு பண்ணி தான் திருச்சி இந்திராகாந்தி காலேஜ்ல பி.பி.ஏ சேர்ந்தேன்.
ஆர்.ஜே வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நான் ஹால்மார்க் பிஸ்னஸ் ஸ்கூல்ல எம்.பி.ஏ படிச்சிட்டு இருந்தேன். அம்மா ஆல் இந்தியா ரேடியோவோட விசிறி, அதனால தினமும் ரேடியோ கேப்பாங்க. ஆடிசன் வரப்போ, அம்மாதான் என்னை கலந்துக்க சொன்னாங்க. எனக்கு எவ்வளவு நல்லா தமிழ் பேசத்தெரியும்னு ஆல் இந்தியா ரேடியோ செலக்சன்ல கலந்துக்கிட்டப்பதான் எனக்கு தெரியும்.ஒரு வழியா தேர்வாகி இப்போ 4 வருடமா ஆர்.ஜேவாக வேலை பார்க்கிறேன்.
ஆர்.ஜேக்கான தகுதிகள்?
எந்த ஒரு தலைப்பு கொடுத்தாலும், அந்த தலைப்பை பற்றி நல்லா பேச தெரியனும், பேசும்போதே நகைச்சுவை கலந்து பேசனும். பயம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் மைக் முன்னாடி நின்னா பயம் பறந்துடும்.
ஓய்வு நேரங்களை எப்படி கழிப்பீங்க?
ஆல் இந்தியா ரேடியோவை பொறுத்தவரை நிறைய பேர் பகுதி நேரமாக தான் வேலை பார்க்கமுடியும். மாசத்தில ஆறு நாட்கள் தான் வேலை நாட்கள். மற்ற நாட்கள் எல்லாமே ஓய்வு தான். ஷாப்பிங் தான்.
மறக்கமுடியாத நினைவுகள்?
“மழலையர் நேரம்” ஷோ எனக்கு முன்னாடி நிறைய பேர் தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க, ஆனா நான் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்னு ஐடியா பண்ணி ஒரு பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் போல ஷோவை கொண்டுபோனேன்.
என்கூட பேத்தியா ஆர்.ஜே செல்வமணியும், நான் ஆச்சி பாட்டியாவும் மாறி ஷோ பண்ணோம். ஒரு நாள் ஷோ முடிஞ்ச அப்பறமும் ரொம்ப நேரம் போன் வந்துட்டே இருந்தது.
சண்முகின்னு ஒரு குழந்தையோட அம்மா “என் பொண்ணு உங்க ஷோல பேசமுடியலன்னு ரொம்ப அழறா, சாப்பிட மாட்டேங்கறா, உங்ககிட்ட பேசியே ஆகனும் சொல்றா”ன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் நான் அந்த குழந்தைகிட்ட பேசினேன்.
வெறும் வாய்ஸ் வச்சு நம்ம கிட்ட இவ்வளவு பேர், அதுவும் யாரு என்னன்னு
முன், பின் தெரியாதவங்க அன்பு காட்றாங்கன்னு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. இப்போ அவங்க குடும்பமே என்னுடைய நண்பர்களாயிட்டாங்க.
அடுத்தது என்ன?
மார்கெட்டிங் எனக்கு எப்போதுமே பிடிச்ச வேலை. ஆனா அந்த மார்கெட்டிங் மீடியாவுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
– சுபா ராஜேந்திரன்