ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள்… ஏமாற்று வேலையா..?
ஓர் ஊழியர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிவது தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘மூன் லைட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
அலுவலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் ஒரு சிலர் இரண்டு வெவ்வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இரட்டை ஊதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓர் ஊழியர் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிவது ‘மூன் லைட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.
‘‘ஒவ்வொரு நிறுவனத்திலும் பணி நேரம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தப் பணி நேரத்தில் ஒருவர் மற்றொரு நிறுவனத்துக்குப் பணிபுரிந்தால்தான் தவறாகும். அதற்கு மாறாக, தமது பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் ஓர் ஊழியர் பகுதி நேரமாக மற்றொரு நிறுவனத்தில் பணிபுரிவது தவறு என்று கூற முடியாது.
ஹோட்டல்களில் இருந்து உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி நிறுவனம் இதற்கு ஒருபடி மேலே சென்று தம் ஊழியர்கள் பகுதி நேரமாக மற்றொரு நிறுவனத்தில் பணி புரிவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அதை தமது நிறுவனம் வரவேற்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்த விவாதத்தில் அதிகம் சிக்கி இருப்பது தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த ஊழியர்கள்தாம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்தால், அதிக ஊதியம் கிடைக்கும். மேலும், பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தால் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.
ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கம் என்பதும் அதிக அளவில் நடைபெறுகிறது. அதிக அனுபவம் உள்ள ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் வழக்கம் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகமாக உள்ளது.
சில நிறுவனங்கள் நிறுவனத்தின் லாப விகிதம் குறையும்போது ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கின்றனர். இந்த மாதத் தொடக்கத்தில் விப்ரோ நிறுவனம் லாப விகிதம் குறைந்ததால் சென்ற காலாண்டுக்கான வேரியபில் பே-யைக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இதனால் ஓர் ஊழியரின் மொத்த ஊதியத்தில் 25% வரை இதன் மூலம் குறைவதற்கு வாய்ப்புள்ளது எனச் சொல்லப் படுகிறது.