இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்…
சாலை விபத்தின் போது இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காப்பதில் ஹெல்மெட்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ‘தலைக்கவசம் உயிர் கவசம்’ என்ற வாசகத்தோடு போக்குவரத்துறையினர் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் தான் நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டதோடு, அதோடு குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தலைகவசங்களை தயாரிக்கும்படி ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இங்கிருக்கும் பெரும்பா லான மக்கள் ஹெல்மெட்டை உயிர் காக்கும் கவசமாக பார்க்காமல், ஏதோ போலீசிடம் இருந்து தப்பிச் செல்ல பயன்படும் மாஸ்க் போல நினைக்கின்றனர். பொதுவாக ஹெல்மெட் அணிந்தவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்துவது கிடையாது. இதனால் வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர் போலீசை பார்த்தால் மட்டும் ஹெல்மெட்டை அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது.
ஹெல்மெட் தொடர்பான சில விதிகளை பின்பற்றாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படலாம் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதாவது, உங்கள் ஹெல்மெட் எப்படி இருக்க வேண்டும், எப்படி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், போன்ற சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதுபற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்….
அணியும் முறைகள்:
1. சாலை போக்குவரத்து விதிகளின் படி, ஹெல்மெட் விபத்து ஏற்பட்டால் தலையை முழுமையாக பாதுகாக்கும் அளவிற்கு அதிகபட்ச பாதுகாப்பு தரக்கூடிய உறுதியான பொருளால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. இருசக்கர வாகனம் ஓட்டுபவர் தலையை முழுமையாக கவர் செய்யும் வகையில், ஹெல்மெட் அணிய வேண்டும். ஏதோ போடச் சொல்கிறார்களே என்பதற்காக கடமைக்கு ஹெல்மெட்டை தலையில் போட்டிருக்க கூடாது. முழுவதுமாக தலைக்கவசத்திற்கான பட்டைகளை அணிந்திருக்க வேண்டும்.
ஹெல்மெட்டிற்கான விதிகள் என்னென்ன.?
1. ஹெல்மெட்டின் எடை 1.2 கிலோ வரை இருக்க வேண்டும்.
2. ஹெல்மெட்டிற்கு உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் ஃபோம் உயர்தரமானதாக பயன் படுத்தப்பட வேண்டும் மற்றும் அதன் குறைந்தபட்ச தடிமன் 20-25 மிமீ இருக்க வேண்டும்.
3. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MORTH) விதிகளின் படி, அனைத்து ஹெல்மெட்டுகளுக்கும் ISI முத்திரை இருப்பது கட்டாயம். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டை அணிவது மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
4. ஹெல்மெட்டில் கண்களுக்கு நல்ல தரம் வாய்ந்த ட்ரான்ஸ்பிரண்ட் கவர் பயன்படுத்தப்பட வேண்டும்.
5. ஹெல்மெட் BIS சான்றிதழ் பெற்றிருப்பதும் மிகவும் அவசியமானது.
6. ஒருவேளை நீங்கள் அணிந்துள்ள ஹெல்மெட் சாலை பாதுகாப்பு விதிகளை மீறும் விதத்தில் இருந்தால், உங்கள் ஹெல்மெட் பறிமுதல் செய்யப்படலாம்.