எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் நான்கு வகை மனிதர்களை பார்க்க முடியும். மேலதிகாரியை அண்டிப் பிழைப்பவர்கள் – முதல் வகை. மேலதிகாரியை வெறுப்பவர்கள் – இரண்டாவது வகை. யார் ஆட்சி செய்தால் என்ன..? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி.. என்று எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் – மூன்றாவது வகை. நிறுவனத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் நிறுவனத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவர்கள் – நான்காவது வகை.
இந்த குணத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிங்கத்தின் பின் செல்வோம்.
ஒரு காடு. மதிய நேரம். சிங்கம் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது எலி ஒன்று சிங்கத்தின் மீது ஏறி விளையாடியது. சிங்கத்திற்கு தூக்கம் கலைந்தது. கோபத்தில் எலியை பிடித்தது. மிரண்டு போன எலி, தன்னை விட்டுவிடும்படி கதறியது.
சிங்கம், “இப்படி விளையாடக் கூடாது என்று எத்தனை முறை சொல்லி இருக்கேன். நீ திருந்தவே மாட்டேங்குற. உன்னை திங்கப் போறேன்” என்றது. கெஞ்சியது எலி. சிங்கம் மனம் இறங்கியது.
“உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். காட்டுல இருக்கிற மிருகங்களிடம் உன்னை காண்பிக்கிறேன். யாராவது ஒருத்தர் நீ எலின்னு சரியா சொல்லிட்டாங்கன்னா உன்னை விட்டு விடுகிறேன். யாருக்கும் பதில் தெரியலைன்னா உன்னைத் தின்று விடுவேன்” என்றது.
“நம்மளை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா. சிங்கம் சரியான முட்டாள். அப்பாடா தப்பித்தோம்” என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டு, சரி என்றது எலி. சிங்கம் நடக்கத் தொடங்கியது. எதிரில் தென்பட்ட முதல் விலங்கு ஒரு மான். மானை கூப்பிட்டது சிங்கம். நடுங்கியவாறு வந்ததும் எலியை தூக்கி மானிடம் காண்பித்து, “இது என்ன.? சரியான பதிலைச் சொன்னால் இதை விடுதலை செய்வேன். அப்படி இல்லாமல் தவறான பதிலை சொன்னால் உன்னை கொன்று தின்று விடுவேன்.
மான் யோசிக்கத் தொடங்கியது. எலியை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்கள்? சிங்கத்திற்கு எலியை தெரியாதா? கேள்வியில் ஏதோ ஒரு விவகாரம் இருக்கிறது. சொல்லும் பதில் தவறாகிப் போனால், உயிர் போய்விடும். தெரியாது என்று சொல்லி ஒதுங்கி விடுவோம் என்று முடிவு செய்தது மான். அரசே உங்கள் கேள்விக்கு பதில் தெரியவில்லை” என்றது பவ்யமாக.
சரி. என் பின்னால் வா” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கியது சிங்கம். எதையும் புரிந்து கொள்ள முடியாமல் சிங்கத்தை பின் தொடர்ந்தது மான். அடுத்ததாக எதிரில் தென்பட்டது பசு. மானிடம் கேட்ட அதே கேள்வியை பசுவிடம் கேட்டது. பசுவும் மானை போலவே பதில் சொன்னது. அப்புறமென்ன? பசுவும் சிங்கத்தின் பின்னால் ஊர்வலமாக நடக்கத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் சிங்கத்தின் ஊர்வலத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. திருதிருவென விழித்தது எலி. அந்த சமயத்தில் ஒரு பூனை எதிரில் வந்து கொண்டிருந்தது. பூனையை கூப்பிட்டது சிங்கம்.
‘அரசே! என்ன ஊர்வலம் இது.?’ என்று பயப்படாமல் கேட்டது பூனை.
“இது முட்டாள்களின் ஊர்வலம். இதைவிடு. என் கேள்விக்கு பதில் சொல்” என்று அதே கேள்வியை பூனையிடம் கேட்டது. சிரித்தது பூனை.
“இந்தக் கேள்விக்கா பதில் தெரியவில்லை? அரசே உங்களிடம் இருப்பது எலி“ என்றது பவ்யமாக.
”ஆஹா சரியான பதில். உன்னால் இந்த எலி விடுதலை பெற்றது” என்றது.
“ஐயோ என்னை விடுதலை செய்யாதீர்கள்.. விடுவித்தால் பூனை என்னை தின்று விடும்“ என்று கத்தியது எலி. சிங்கம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எலியை விடுவித்தது. எலி ஓடியது. துரத்திக் கொண்டு பூனையும் ஓடியது.
பூனை எலியை பிடித்ததா.? பூனையின் சரியான பதிலுக்கு கிடைத்த பரிசு தான் எலியா?
நடந்தவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு சாது. சிங்கம் சாதுவிடம் சென்றது. அதைப் பின் தொடர்ந்து மற்ற மிருகங்களும் சென்றன.
“இத்தனை முட்டாள்களுக்கும் நான் தலைவனாக இருக்கிறேன் என்று வெட்கமாக இருக்கிறது. ஒரு எலியை கூட இவர்களால் அடையாளம் காண முடியவில்லையே” என்று வேதனைப்பட்டது.
அரசனுக்கே பதில் தெரியவில்லை. அதனால் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. கேள்வியில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கொஞ்சம் அதிகப்படியாக யோசித்தன. தவறாகச் சொன்னால் உயிர் போய்விடும். எதற்கு வம்பு என்று அமைதியாக இருந்தன. ஆனால் பூனை, கழுதை, குரங்கு போன்ற விலங்குகள் மீது உனக்கு எப்போதுமே அருவருப்பு உண்டு. அவற்றை நீ சாப்பிடுவதில்லை. அதனால் பூனைக்கு உன் மீது பயம் இல்லை. தைரியமாக பதிலளித்தது. பயம் இல்லாத சூழலில் மட்டுமே ஒருவரின் முழுத் திறமை வெளிப்படும். அதனால் உன்னை முட்டாள்களின் தலைவன் என்று சொல்லாதே. பயந்தவர்களின் தலைவன் என்று சொல்” என்றார் சாது.
அடுத்தவரின் பயமே பலரை தலைவராக வைத்துள்ளது என்பது நமக்குப் புரிகிறது. அதனால் புத்திசாலியாக மாற வேண்டுமா? அதிகமா யோசிக்காதீங்க. எதார்த்தமா இருங்க. பதில் சொன்னவன் மட்டும் புத்திசாலி அல்ல. அமைதியாக இருப்பவனும் புத்திசாலியாக இருப்பான். ஆனால் வெளியில் தெரியாது. வெளியில் தெரியாத புத்திசாலித்தனம் முட்டாள்தனம்.
-ஆசிரியர், சாது ஸ்ரீராம் எழுதி, மதி நிலையம் வெளியிட்ட
“சிறந்த நிர்வாகி” புத்தகத்திலிருந்து.