எந்த ஃபண்ட் பெஸ்ட்…? தெரிஞ்சுக்கோங்க!
இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் முதன்மை அம்சம் பொருந்திய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் பார்க்கப்படுகிறது. இதில் புதியதாக முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள் முதல் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் வரையில் அனைவருக்கும் பொருந்தும் வகையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
ஈக்விட்டி ஃபண்டுகள்
இவை முழுக்க முழுக்க ஈக்விட்டிகளில் முதலீடு செய்யப்படும் ஃபண்டுகளாகும். இந்த ஃபண்டுகளில் சரியான நிறுவனங்களின் பங்குகளை தேர்வு செய்து பங்குகளை வாங்கி வைக்கின்றன. இதில் ரிஸ்கும் அதிகம். அதே அளவு லாபமும் அதிகம். இந்த ஈக்விட்டி ஃபண்டுகளிலும் துறை சார்ந்த ஃபண்டுகளும் உள்ளன. இது பங்கு சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்டில் அனுபவம் உள்ளவர்களுக்கு பொருந்தும். ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
பத்திர ஃபண்டுகள்
இந்த வகை ஃபண்டுகள் நிரந்த வருமானம் தரக்கூடிய பத்திர சந்தையில் முதலீடு செய்யப் படுகின்றன. இவைகள் அரசு கடன் பத்திரங்கள், நிறுவன கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. இவற்றில் ரிஸ்க் குறைவு. எனினும் லாபமும் குறைவு. குறைந்த லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை, ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை என நினைப்பவர்களுக்கு இந்த ஃபண்ட் பொருந்தும். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு பொருந்தும்.
மணி மார்கெட் ஃபண்ட்ஸ்
இவை குறுகிய கால செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். அதாவது அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும். அரசாங்க பத்திரங்கள், டிரசரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் என பலவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. இந்த லிக்விட் ஃபண்டுகளும் பத்திர ஃபண்டுகள் போல் தான். எனினும் இது குறுகிய கால ஃபண்டுகள். இதில் குறுகிய காலம் என்பதால் பெரியளவில் லாபம் கிடைக்க வழியில்லை. எனினும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.
பேலன்ஸ்டு ஃபண்ட்ஸ்
இதில் உங்களது முதலீடானது பிரித்து பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்படும். இதனால் ரிஸ்கும் குறைவு. லாபமும் சற்று சராசரியாக இருக்கும். இது அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பதாக முதலீட்டாளார்களுக்கு பொருந்தும். ஏனெனில் ஈக்விட்டி ஃபண்ட், லிக்விட், பத்திர சந்தை, செக்டோரல், இப்படி அனைத்திலும் பிரித்து செய்யப்படுவதால் ஒரு நஷ்டம் கண்டாலும், மற்றொன்று அதனை ஈடுகட்டி விடும்.