வங்கிக் கடன் வேல்யூயேஷன் ரிப்போர்ட் கேட்பது ஏன்?
வங்கியில் கடன் வாங்கும் வாடிக்கையாளர், தான் வாங்கும் கடனுக்காக சொத்து ஒன்றை அடமானமாகத் தருகிறார். வாடிக்கையாளர் அந்த சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று சொல்கிறார். அந்த மதிப்பை வங்கிகள் அப்படியே ஏற்றுக்கொள்ளாது. அந்த சொத்து வாடிக்கையாளருடைய சொத்து தானா? அதனை விற்க முடியுமா? என்று டைட்டில் வெரிஃபிகேஷன் செய்வது போல, அடமானச் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்றும் வங்கிகள் பார்க்கும்.
டைட்டில் ரிப்போர்ட் வழங்க வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்கள் இருப்பது போலவே சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்கும் வங்கி அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தான் வேல்யூயேசன் ரிப்போர்ட் வாங்க வேண்டும்.
இங்கு வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள வேண்டியது, வேல்யூயேசன் ரிப்போர்ட் என்பது ஒரு சொத்தின் மதிப்பை வங்கி அறிந்து கொள்வதற்காக ஒரு தகுதியான கட்டிடக் கலைஞர் அல்லது பொறியாளர் மூலமாக மதிப்பீடு செய்து அறிக்கை வாங்கிக் கொள்கிறது. இதற்காக வாடிக்கையாளர் வேல்யூயேட்டரிடம் சொத்தைக் காண்பித்து சொத்து மதிப்பு அறிக்கையை வாங்க வேண்டும்.
பல நேரங்களில் வங்கிகளே தங்களது அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர்களை ஏற்பாடு செய்து தரும். பல வங்கிகள், சொத்தை மதிப்பீடு செய்யும் போது அந்த வங்கியின் மேலாளரும் உடன் இருந்து, வாடிக்கையாளருடன் மதிப்பீடு செய்பவரையும் அருகில் நிற்க வைத்து படம் எடுத்துக் கொள்ளும் நடைமுறையையும் கடைபிடிக்கின்றன.
சொத்து மதிப்பீட்டு ஆவணங்கள்: சரி ஒரு சொத்தை மதிப்பீடு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் கேட்கப்படும். முதலில் சொத்து உங்களுடையது தானா என்பதை தெரிந்து கொள்வதற்கான ஆவணங்களின் நகல் கேட்கப்படும், சில நேரங்களில் லீகல் ஒப்பீனியனும் கேட்கப்படலாம். அடுத்தவரின் சொத்தை காட்டி மதிப்பீட சொல்லக்கூடாது என்பதற்காக டைட்டில் டீட் நகல் கேட்கலாம். இவை போக இடத்தின் அமைவிடம் குறித்த வரைபடம், அப்ரூவ்ட் ப்ளான், லேட அவுட் அப்ரூட் ப்ளான், கட்டிடத்திற்கான அப்ரூவல் ப்ளனையும் கேட்பார்கள். வரி கட்டியதற்கான ரசீது கேட்பார்கள்.
மதிப்பீட்டில் கைடு லைன் வேல்யூ என்ற ஒன்று இருக்கிறது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள மதிப்பு. அதே போல மார்க்கெட் வேல்யூ என இருக்கிறது. அதாவது விற்பனை செய்யப்படும் போது அந்தச் சொத்து என்ன மதிப்பிற்கு விற்கப்படும் என்பதே அது. இவை தவிர வங்கிகள் டிஸ்ட்ரெஸ் சேல் வேல்யூ” (Distress Sale Value) என்ற ஒன்றை பார்க்கும். அதாவது வங்கியில் அடமானமாக உள்ள சொத்தை அவசரத்திற்கு உடனடியாக விற்க வேண்டியது வந்தால் வீடு என்ன விலைக்கு வாங்கப்படும் என்று வங்கி பார்க்கும்.
லொக்கேஷன் முக்கியம்: பெரிய சொத்துக்களாக இருந்தால் இரண்டு மதிப்பீட்டு அறிக்கை வாங்கும். வாடிக்கையாளருக்காக அவரின் செலவில் சொத்து மதிப்பீடு நடப்பதால், அறிக்கையின் நகலை வங்கிவைத்துக் கொள்ளலாம். வேல்யூயேஷன் ரிப்போர்ட் என்பது, நிலம், வீடுகளுக்கு வாங்கப்படுவது போல செகண்ஹேண்ட் இயந்திரங்கள், கார்களுக்கும் கூட உண்டு. வேல்யூயேஷன் ரிப்போர்ட்டில் முக்கியமாக பார்க்க வேண்டியது “லொக்கேசன்”. வீடு நன்றாக இருக்கலாம் ஆனால் அது அமைந்திருக்கும் இடம் சரியாக இல்லை என்றால் வீட்டிற்கு மதிப்பு இருக்காது.